ஷாரிர்: முகிதீனுக்கு ஆதரவு, பாரிசானுக்கு இலாபமா?

முகிதீன் யாசினை பிரதமராக ஆதரிக்க முவாபாகாத் நேஷனல் எடுத்த முடிவு, பாரிசானை பாதிக்காது என்பதை கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று அம்னோ கட்சியின் ஷாரிர் சமாத் கூறியுள்ளார்.

இந்த முடிவு பாரிசானின் இட ஒதுக்கீடு, சின்னம் மற்றும் வாக்காளர்களுக்கும் மக்களுக்குமான சலுகைகளையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

“ஆகவே தான், முகிதீனை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவு, கட்சிக்கு பங்கம் விளைவிக்காத ஒரு முடிவாக இருக்க வேண்டும்” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜொகூர் பாருவின் நிலைமையை ஷாரிர் ஒரு எடுத்துக்காட்டாகக் கொடுத்தார். அங்கு, அம்னோ தனது இடங்களை பெர்சத்து மற்றும் முகமட் அஸ்மின் அலியின் ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது என்றார்.

“பாக்காத்தான் ஹராப்பான் மாநில அரசாங்கத்தின் போது, பதவிகளை பாக்காத்தான் கூட்டணி கட்சிகள் பகிர்ந்து கொண்டன.”

“அரசாங்கம் மாறிய பின், பாரிசான், இந்த பதவிகளை பெர்சத்துவுடன் மட்டுமல்லாமல் முகமட் அஸ்மின் அலியின் ஆதரவாளர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.

ஜோகூர் பாருவின் நிலைமையை எடுத்துக்காட்டுகையில், கடந்த 14வது பொதுத் தேர்தலில் பி.கே.ஆர் வென்ற நாடாளுமன்ற இடங்கள் அஸ்மின் வேட்பாளர்களால் போட்டியிடப்படக்கூடும் என்று ஷாரிர் கூறினார்.

அஸ்மினுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு தற்போது பதவிகள் வழங்கப்பட்டதால் இந்த ஊகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

“ஒரு தேசிய கூட்டணியை அங்கீகரிக்க பாரிசான் இழுக்கப்படுகிறது.”

“அதன் தலைவர் முகிதீன். அஸ்மின் அலி அவரது முக்கிய தலைவர். மேலும் 15வது பொதுத் தேர்தலுக்கு முகிதீன் பிரதமராக அறிவிக்கப்பட்டுவிட்டார். அஸ்மின் எப்படி? அனைத்து பி.கே.ஆர் இடங்களும் அஸ்மின் குழுவிற்கு தரப்படுமா? ஆஹா, அற்புதம், அற்புதம்” என்று அவர் கூறினார்.