முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபுவின் உதவியாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்து தடுத்து வைத்துள்ளது.
நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி வட்டாரங்கள் மலேசியாகினிக்கு உறுதிப்படுத்தின.
அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேல் விவரங்களுக்கு அமானாவின் தலைவரான மாட் சாபுவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது மலேசியாகினி.
தனது திவால் சிக்கலைத் தீர்ப்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து RM800,000க்கும் அதிகமான தொகையைப் பெற்ற குற்றச்சாட்டில் 2018 ஆம் ஆண்டில் அந்த அதிகாரி மீது எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியது.
இன்று காலை எம்ஏசிசி அந்த அதிகாரியை அமானா தலைமையகத்திற்கு அழைத்து வந்தது. இருப்பினும், அது எந்தவொரு பறிமுதலையும் செய்யவில்லை.
முன்னதாக, அந்த அதிகாரி 2014 ஆம் ஆண்டளவில் திவாலானதாகவும், கடனைத் தீர்ப்பதற்காக கட்டணங்கள் செலுத்தப்பட்ட நிலையில், அவரின் திவால் நிலை 2018 மே இறுதி வரை நீடித்ததாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
“RM800,000க்கும் அதிகமாக கடன்கள் பல தரப்பினரால் செலுத்தப்பட்டு இருந்ததால், அவர் எம்ஏசிசி ஆல் விசாரிக்கப்பட்டார்.”
“முகமது சாபு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் அந்த அதிகாரியின் பெயரில் பணம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது” என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், பல பாதுகாப்பு ஒப்பந்ததார்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட 10 பேரின் அறிக்கைகளையும் எம்ஏசிசி பதிவு செய்தது.