‘நாடாளுமன்ற சபாநாயகரை பெயரிட எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை’ – பி.பிரபாகரன்

அடுத்த திங்கட்கிழமை நடைபெரும் நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் முகமட் அரிஃப் யூசோப் அகற்றப்பட்டால் புதிய சபாநாயகரை நியமிக்கும் வாய்ப்பு எதிர்க்கட்சிக்கும் வழங்கப்பட வேண்டும்.

அரிஃப்பை அகற்றுவதற்கான திட்டத்துடன் இணைந்து அதே நாளில் புதிய சபாநாயகரை நியமிக்கவும் முன்மொழிந்திருக்கும் முகிதீன் யாசினின் செயல் தவறானது என்று பாத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கூறினார்.

“சபாநாயகரின் பதவி காலியாக இருந்தால் புதிய சபாநாயகரை பெயரிடும் உரிமையை மலேசிய நாடாளுமன்றம் எதிர்க்கட்சிக்கும் வழங்குகிறது.”

“எவ்வாறாயினும், அப்படி எதிர்க்கட்சி பரிந்துரைக்கும் சபாநாயகரின் பெயரை 14 நாட்களுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால் எங்களால் அறிவிக்க முடியவில்லை.”

“பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இருக்கிறதா என்பது குறித்து முகிதீனுக்கே தெரியாத போது, எதிர்க்கட்சியிலிருந்து சபாநாயகர் வேட்பாளரை எங்களால் எப்படி அறிவிக்க முடியும்.”

“எனவே, அரிஃப் பதவி நீக்கம் செய்யப்பட்ட 14 நாட்களுக்குப் பின்னர் இன்னொரு அமர்வை நடத்துமாறு நாடாளுமன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் குறித்து நான்கு திட்டங்களை முன்வைத்துள்ளார் முகிதீன்.

நான்கு திட்டங்கள் முறையே இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது நிகழ்ச்சி நிரலாக பட்டியலிடப்பட்டுள்ளன.

இரண்டாவது திட்டமாக முகமட் அரிஃபை பதவியில் இருந்து நீக்க முகிதீன் முன்மொழிந்துள்ளார்.

மூன்றாவது திட்டத்தில், புதிய சபாநாயகராக தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அஜீசான் ஹாருனை நியமிக்க வேண்டும் என்று முகிதீன் முன்மொழிந்துள்ளார்.

நான்காவது திட்டத்தில் துணை சபாநாயகர் ஙா கோர் மிங்கை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அடுத்த பிரேரணையில் ஙாவிற்கு பதிலாக பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஓத்மானை துணை சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளார் முகிதீன்.

முகிதீனுக்கு போதுமான ஆதரவு இருந்தால் மட்டுமே அசார் மற்றும் அசாலினா ஆகியோரை நியமனம் செய்ய முடியும் என்று பிரபாகரன் கூறினார்.

“முகிதீனுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது? அதுதான் முதல் கேள்வி.

“இரண்டாவதாக, எதிர்க்கட்சிக்கு அவர்கள் விரும்பும் சபாநாயகரை பரிந்துரைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.”

“மேலும் அரிஃப் மற்றும் ஙாவுக்கு எதிராக செய்யப்படும் பிரேரணைக்கு பெரும்பான்மை இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே மாற்று வேட்பாளரின் பெயரை முன்மொழிய முடியும்” என்று அவர் கூறினார்.