கோவிட்-19: 3 புதிய பாதிப்புகள் மட்டுமே, ஸ்ரீ பெட்டாலிங் திரளை முடிவடைந்தது

மூன்று புதிய கோவிட்-19 பாதிப்புகள் மட்டுமே இன்று பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள், இறக்குமதி செய்யப்பட்டவை என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கையை 8,677 ஆகக் கொண்டுவருகிறது.

இதற்கிடையில், மேலும் ஐந்து நோயாளிகள் குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் குணமடைந்த மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,486 அல்லது 97.8 சதவிகிதமாக உள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 70 ஆகும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தற்போது இரண்டு நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) வைக்கப்பட்டுள்ளனர், ஒருவருக்கு சுவாச உதவி வழங்கப்படுகிறது.

கோவிட்-19 இறப்புகளில் அதிகரிப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இதன் விளைவாக தொடர்ந்து 24 நாட்களாக இறப்பு எண்ணிக்கை 121 ஆக உள்ளன என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

“மலேசியாவின் மிகப்பெரிய கோவிட்-19 திரளையான (கிளஸ்டர்), ஸ்ரீ பெட்டாலிங் திரளை இன்றோடு முடிவடைகிறது என்பதை சுகாதார அமைச்சு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.” என்றும் அவர் அறிவித்தார்.