உயர்கல்வி நிறுவனங்கள் அக்டோபரில் முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் நோராய்னி அகமட் அறிவித்துள்ளார்.
“இந்த முடிவை முழுமையாக செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, மாணவர்கள் இப்போதிருந்தே தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”
“அக்டோபரில் புதிய செமஸ்டர் தொடங்கும் முன்னதாக, வரும் இந்த மூன்று மாதங்கள் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய போதுமானதாக இருக்கும் என்று உயர்கல்வி துறை அமைச்சு கருதுகிறது” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கோவிட்-19 காரணமாக மார்ச் 18 முதல் நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையால் நாடு தழுவிய அளவில் உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், உயர்கல்வி நிறுவனங்கள் முழுமையாக மீண்டும் திறப்பதைத் தொடர்ந்து சில மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் குறித்து குறிப்பாக தங்குமிடம் மற்றும் வளாகத்திற்கு திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகள் பிரச்சினைகள் குறித்தும் உயர்கல்வி துறை அமைச்சு அறிந்திருப்பதாக நோராய்னி கூறினார்.
“எனவே, இந்த பிரச்சினைகளை தீர்க்க தேவையான அனைத்து முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.”
“இந்த விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் விவகாரத் துறையைத் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், வெளிநாட்டு மாணவர்கள் குறித்து கருத்து தெரிவித்த நோராய்னி, மலேசிய குடிநுழைவுத் துறையால் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் உலகளாவிய மலேசியா கல்வி சேவைகளில் (Education Malaysia Global Services (EMGS) பதிவு செய்ய வேண்டும் என்றார்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் கீழ் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிய சுமார் 11,000 வெளிநாட்டு மாணவர்களைப் பற்றி அவர் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
இங்குள்ள வளாகத்திற்குத் திரும்ப விரும்பும் மாணவர்கள், மலேசியாவிற்குள் நுழைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தங்கள் சொந்த நாட்டில் ஒரு பிணிப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பின்னர் நாட்டின் நுழைவாயிலில் சுகாதார அமைச்சால் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களது உயர்கல்வி நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படும் இடங்களில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.
“இது இந்தோனேசியா உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருந்தும்” என்று அவர் கூறினார்.