பிரதமர் முகிதீன் யாசின் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் என்றும், அகமட் ஜாஹிட் ஹமீடியிடமிருந்து அக்கட்சியின் தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் பரிந்துரைத்துள்ளார்.
முகிதீன் மீண்டும் அம்னோவில் சேர்ந்தால் இட ஒதுக்கீடு உட்பட பல பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று முன்னாள் சுற்றுலா துறை அமைச்சர் முகமட் நஸ்ரி தெரிவித்தார்.
“முகிதீன் அம்னோவை விட்டு விலகவில்லை. அவர் அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்தால், பிரதமர் பதவியை மீண்டும் அம்னோவிற்கு கொண்டு வருவார். அது அவரது மகத்தானதான பங்களிப்பாக இருக்கும்.”
“அம்னோ தலைவருக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் கட்சி தான் முக்கியமானது. நாம் அதை திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
முகிதீன் மீண்டும் அம்னோவில் சேர வேண்டும் என்று முன்னதாக சில அம்னோ தலைவர்கள் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.
அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியும், அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் தாஜுதீன் அப்துல் ரஹ்மானும் முகிதீனை அம்னோ கட்சியில் சேர அழைத்துள்ளனர்.
இதற்கிடையில், அம்னோ தலைவர் பதவியை முகிதீனிடம் ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளார் நஸ்ரி. பாரம்பரியமாக பிரதமர் பதவியை கட்சித் தலைவரே வகித்துள்ளார். அம்னோ உறுப்பினர்கள் அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என நஸ்ரி தெரிவித்தார்.
“மலாய்க்காரர்களாகிய நாம், மதம், இனம் மற்றும் நாடு ஆகியவற்றிற்காக ஒருவருக்கொருவர் மன்னித்து மறக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.”
“அம்னோ தலைவர் பதவியை முகிதீனுக்கு தர நாம் கட்டுப்பட்டிருக்கிறோம், ஏனெனில் அவர் வெறுங்கையுடன் வரவில்லை, பிரதமர் பதவியுடன் வருகிறார். நாம் அவரை திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், தியாகம் செய்ய வேண்டும்.”
“நான் ஒரு மலாய் புதல்வன். நம் மதத்துக்கும் நம் இனத்துக்கும் நம்மால் செய்ய முடியாத தியாகம் ஒன்றுமே இல்லை” என்று அவர் கூறினார்.
முகிதீன் திரும்ப வந்தால் மட்டுமே தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று அவர் விளக்கினார்.
எவ்வாறாயினும், அம்னோவுக்கு முகிதீன் மட்டும் திரும்பி வருவாரா அல்லது அவருடன் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.