2023 வரை பொதுத் தேர்தல் இருக்காது என்று பிரதமர் தைரியமாக அறிவிக்க வேண்டும் – நஸ்ரி அஜீஸ்

2023 வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று பிரதமர் முகிதீன் யாசின் தைரியமாக அறிவிக்க வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஜீஸ் கூறினார்.

இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை வலுபடுத்த முகிதீனுக்கு போதுமான நேரத்தையும் அளிக்கும் என்று நஸ்ரி கூறினார்.

“முகிதீன் இந்த விஷயத்தை அறிவித்தால், மக்கள் அவரை ஒரு தைரியமானவராகவும் நம்பிக்கை உள்ளவராகவும் பார்ப்பார்கள்.

ஒரு திடீர் தேர்தலை எதிர்கொள்ள தேசிய கூட்டணி இன்னும் தயாராக இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் உட்பட பல தரப்பினர்களின் கருத்துக்கள் குறித்து நஸ்ரி இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த நஸ்ரி, முகிதீன் தலைமையிலான பெர்சத்து கட்சியில் அடிமட்ட உறுப்பினர்கள் இல்லாததாலும் திடீர் தேர்தலை எதிர்கொள்ள அது தயாராக இல்லை என்றார்.

“சமீபத்திய சினி இடைத் தேர்தலை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பெர்சத்து உதவ விரும்பாமல் இல்லை. ஆனால், அவர்களிடம் ஆள் பலம், தொண்டர் படை இல்லை. சினியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே நிலை தான்.

“எனவே, இந்த பிரச்சனையையும், இட ஒதுக்கீடு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், 2023 வரை பொதுத் தேர்தல் இருக்காது என பிரதமர் அறிவிக்க வேண்டும்” என்று நஸ்ரி கூறினார்.