திரங்கானு திரையரங்குகளில் பாலின அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு

திரையரங்குகளில் பாலின பாலின அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்திருக்கும் திரங்கானு அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கை, மக்களிடையே பலதரப்பட்ட கருத்துகளை தூண்டியுள்ளது.

முன்னதாக, திரங்கானு மாநில அரசு அம்மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் பாலின ரீதியாகப் பிரிக்கப்பட்ட இருக்கை விதிகளை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கும், பொழுதுபோக்கு மையத்தை ஷரியா விதிகளுக்கு இணக்கமான இடமாக மாற்றுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களிடையே பலதரப்பட்ட கருத்துகளை தூண்டியுள்ளது.

“ஒரு திரங்கானு குடிமகன் என்ற முறையில், இதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் மக்கள் ஒழுக்கமாக இருக்கவும், அரசாங்கத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியவும் இது கற்றுக்கொடுக்கும்” என்று 40 வயதான முகமட் பைசுல் அப் ஃபத்தா தெரிவித்தார்.

34 வயதான ஆதிலா ஷரின்னி வாஹித், சமூக சீர்கேடுகளை தடுக்கும் முயற்சிகளில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதால் இந்த அணுகுமுறை ஒரு நல்ல செயல் என்றார்.

இதற்கிடையில், இந்த நடவடிக்கை தேவையில்லை என்று கூறும் நபர்களும் உள்ளனர்.

திரையரங்குகளில் பாலின ரீதியாக இருக்கைகளை தனிமைப்படுத்துவது, திரையரங்குகளை இயக்குபவர்களுக்கும் குடும்பத்துடன் வரும் பார்வையாளர்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்தும் என்று 27 வயதான சியாஸ்வானி சாரிப் கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றும், இதற்கு பதிலாக ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே இடைவெளி அமைத்தாலே போதுமானது என்றும் 38 வயதான நூரைடில் ஜகாரியா கூறினார்.

இதற்கிடையில், 31 வயதான முஸ்லிம் அல்லாத இளைஞர் பிரெண்டன், திரங்கானுவில் உள்ள சீன சமூகம் அதிகம் இல்லாததால் இந்த விதி ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்று கூறினார்.

“திரங்கானுவில் உள்ள பெரும்பாலான சீன இளைஞர்கள் குவாந்தான் அல்லது கோலாலம்பூருக்கு சென்று பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபடுவார்கள். எனவே என்னைப் பொறுத்தவரை இதில் எந்த பிரச்சனையும் இல்லை. இங்குள்ள சீன மக்களும் அதிகம் இல்லை” என்று அவர் கூறினார்.