அலோர் ஸ்டாரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து வழிபாட்டு தலம் இடிக்கப்பட்டது

இன்று காலை அலோர் ஸ்டாரின் ஜாலான் ஸ்டேசனில் அமைந்துள்ள 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து வழிபாட்டு தலம் இடிக்கப்பட்டதில் கெடா மஇகா தலைவர் எஸ்.ஆனந்தன் அதிர்ச்சி தெரிவித்தார்.

“நான் அதிர்ச்சியடைகிறேன். இந்த கோயிலின் பிரச்சினை குறித்து விவாதிக்க கெடா மஇகா கடந்த ஜூன் 30 அன்று மாநில அரசுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது.”

“விளக்கம் பெறுவதற்காக நான் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோரைத் தொடர்புகொள்வேன்,” என்று இன்று பிற்பகல் கோவில் தலத்தைப் பார்வையிட்ட பின்னர் அவர் கூறினார்.

அதிகாலை 1 மணியளவில் நடந்த இந்த நடவடிக்கை அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஆர் குமாரகுரு நாயுடு உள்ளிட்ட பல விமர்சகர்களிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

“உண்மையிலேயே, தேசிய கூட்டணி அரசாங்கம் மாநில அரசாங்கத்தை கைப்பற்றிய பின்னரே இந்த கோயிலை இடிக்கும் பிரச்சினை எழுப்பப்பட்டது. கோயில், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது என்று காரணம் காட்டப்பட்டுள்ளது.”

“முன்னதாக பாக்காத்தான் அரசாங்கத்தின் போதும் புகார்கள் இருந்தன. கோயிலை வேறு இடத்திற்கு மாற்ற சொன்ன போது கோயில் தரப்பினர் ஒப்புக் கொண்டனர்.”

“அந்த நேரத்தில் கெடா பாக்காத்தான் அரசாங்கம் முஸ்லிம் அல்லாத பழைய வழிபாட்டு தலங்களை இடிக்க வேண்டாம் என்று உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.”

“தேசிய கூட்டணி அரசாங்கம், மாநில அரசு ஆனதும் கோயில் திடீரென இடிக்கப்பட்டது” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இந்த ஸ்ரீ மதுரை வீரன் கோயில், 1942 ஆம் ஆண்டில் மலேயன் ரயில்வே (கேடிஎம்) ஊழியர்களால் கட்டப்பட்டது.

இதற்கிடையில், கோயிலை இடிப்பதை ஒத்திவைக்க கோயில் நிர்வாகம் ஜூலை 6 ஆம் தேதி விண்ணப்பம் செய்திருந்த போதிலும், உள்ளூர் அதிகாரிகள் கோயிலை இடித்ததாக குமாரகுரு தெரிவித்தார்.

சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருள்களும் அகற்றப்பட்டன என்றும் குமாரகுரு தெரிவித்தார்.

இதற்கிடையில், கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு போதுமான நேரம் வழங்கப்பட்டதாக கெடா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி பி.குமரேசன் கூறினார்.

“இது ஒரு பழைய பிரச்சினை. பாக்காத்தான் அரசாங்கத்தின் போது, கோயிலை இங்கிருந்து அகற்றுமாறு கோயிலுக்கு மூன்று அறிக்கைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும், கோவிட்-19 நெருக்கடிக்கு பின்னர் இது செயல்படுத்தப்படவில்லை.”

“தேசிய கூட்டணி பொறுப்பேற்ற பிறகு, ஜூன் 22 அன்று மந்திரி பெசார் கோயில் நிர்வாகத்தை சந்தித்து கோயிலை இடமாற்றம் செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்க ஒப்புக்கொண்டார். இருப்பினும், அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்றம் அந்த கால அவகாசத்தை ஒப்புக் கொள்ளவில்லை. எனவே அது 10 நாட்களாக குறைக்கப்பட்டது.”

“ஜூலை 1 ஆம் தேதி, மாநில எக்ஸ்கோ கூட்டத்தில், இந்த கால அவகாசம் நேற்று (ஜூலை 8) வரை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. கோயிலுக்கும் இந்த கால அவகாசம் பற்றி தெரியும்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், குமரேசனின் அறிக்கை தவறானது என்று கெடா மஇகா குழு உறுப்பினர் கே தமிழரசு கூறினார்.

“நாங்கள் இன்று பிற்பகல் அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று மாநகராட்சி மன்றத் தலைவரை சந்தித்தோம். கோயில் இடிக்கப்படுவதைத் தடுக்க மந்திரி பெசார் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினர்.

“கோயிலுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்ற மந்திரி பெசாரின் கோரிக்கையை அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்றம் நிராகரித்தது என்பது உண்மையாக இருந்தால், அதை மந்திரி பெசாரின் அலுவலகம் நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

காலை 1.00 மணி அளவில் கோயிலை இடிப்பது இந்துக்களை புண்படுத்தும் ஒரு செயல் என்றும் அவர் விவரித்தார்.

“சட்ட முறைப்படி செய்யப்பட்டால் அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்றம் ஏன் அதிகாலையில் கோயிலை இடிக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.