ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட அரசு துணை வழக்கறிஞர் அந்தோனி கெவின் மொராய்ஸைக் கொலை செய்த குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கர்னல் டாக்டர் ஆர் குணசேகரன் மற்றும் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆர். குணசேகரன், 57; எஸ். ரவிச்சந்தரன், 49; ஆர். தினீஷ்வரன், 28; ஏ.கே. தினேஷ் குமார், 27; எம். விஸ்வநாத், 30, மற்றும் எஸ். நிமலன், 27 ஆகியோருக்கு எதிராக நீதிபதி அஸ்மான் அப்துல்லா இந்த தீர்ப்பை அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் மொரைஸைக் கொல்ல ஒரு பொதுவான நோக்கம் இருந்ததைக் கண்டறிந்ததாக நீதிபதி அஸ்மான் தெரிவித்தார்.
அரசு தரப்பு தொடுத்த வழக்கில் நியாயமான சந்தேகத்தை எழுப்புவதற்கு
பாதுகாப்பு தரப்பு தவறி விட்டது என்றும், சந்தேகமின்றி தனது வழக்கை நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றதாகவும் அஸ்மான் அவர் தமது தீர்ப்பில் சொன்னார்.
ஏப்ரல் 6, 2016 அன்று விசாரணை தொடங்கியதில் இருந்து மொத்தம் 84 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இவர்கள் 6 பேரும், செப்டம்பர் 4, 2015 அன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை, இங்குள்ள ஜாலான் டூத்தாமாஸ் ராயாவிலிருந்து, எண் 1 ஜாலான் யுஎஸ்ஜே 1/6D, சுபாங் ஜெயாவுக்குச் செல்லும் வழியில், 55 வயதான மொரைஸைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.