குடிநுழைவு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 219 இந்தியர்கள் சொந்த நாடு திரும்புகிறார்கள்

மலேசியாவில் குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

சிறப்பு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மொத்தம் 219 இந்திய குடிமக்கள் இன்று தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். MH8722 சிறப்பு விமானம் மூலம் அவர்கள் பஞ்சாப் அமிர்தசரஸ¤க்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் ஆவணமற்ற வெளிநாட்டவர்கள் ஆவர். சிலருக்கு முறையான பயண ஆவணங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் கோவிட்-19 பாதிப்பால் ஏற்பட்ட சூழ்நிலைகள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 பரவுவதைத் தடுக்க மார்ச் 18 முதல் மலேசியா நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) அமல்படுத்தியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட வெளிநாட்டினர் நாட்டில் சிக்கித் தவிக்க நேரிட்டது.

அவர்கள் வெளியேற முடியாததால், அவர்களின் விசாக்கள் காலாவதியாகி பின்னர் குடிநுழைவுத் துறையால் தடுத்து வைக்கப்பட்டனர்.

தடுப்பு முகாமில் கோவிட்-19 பரவியபோது நிலைமை இன்னும் மோசமடைந்தது.

இதற்கு முன்னர், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமகனான ஜீவ்தீன் மஸ்தான், கோலாலம்பூரின் புக்கிட் ஜாலீலில் உள்ள குடிநுழைவு தடுப்பு மையத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.