நாளை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகரை மாற்றுவதற்கான தீர்மானம் பிரதமர் முகிதீன் யாசினுக்கு உள்ள ஆதரவை அளவிடுவதற்கு சந்தர்ப்பமாக அமையும் என்று பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் ஏ காதிர் ஜாசின் கூறியுள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்ட தேசிய கூட்டணிக்கு (பி.என்) தலைமை தாங்கியுள்ள முகிதீன், கடந்த மாதம் சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப் மற்றும் அவரது துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகியோரை நீக்குவதற்கான தீர்மானத்திற்கு முன்மொழிவை சமர்ப்பித்தார்.
ஆரிஃப் இந்த தீர்மானத்திற்கான முன்மொழிவை விவாதத்திற்கு ஏற்றுக் கொண்டார். நாளை கூடும் நாடாளுமன்றத்தின் போது தாக்கல் செய்யப்படும் முதல் தீர்மானமாக இது இருக்கும். நாடாளுமன்ற அமர்வு ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 27 வரை நடைபெற உள்ளது.
“ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. அவர் சபையின் எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடும். முகமட் ஆரிஃப்பை நீக்குவதற்கும் அசாரை நியமிப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உறுப்பினர்கள் உடன்படாமல் போகலாம்.”
“இது நடந்தால், பிரதமராக அவரது நிலைப்பாடு பாதிக்கப்படும். ஏனெனில் இதுபோன்ற சூழ்நிலைகள் அவர் மீது நம்பிக்கையில்லை என்று மறைமுகமாக விளக்கப்படலாம்” என்று கதிர் எழுதினார்.
பிரதமர் ஒருவர் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை நீக்க தீர்மானம் கொண்டு வருவது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் ஊடக ஆலோசகராக இருந்த காதிர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், அசார் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்றத்தின் தற்போதைய சுதந்திரத்தைத் தொடர முடியும் என்று காதிர் பரிந்துரைத்தார். அசார் ஜூன் 29 அன்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
ஆனால், இது குறித்து கவலைகளும் எழுப்பப்பட்டன. நான்கு மாதங்களுக்கு முன்பு முகிதீன், அசாரின் சகோதரர் இட்ரீஸ் ஹாருனை அட்டர்னி ஜெனரலாக நியமித்திருப்பதே இதற்கு காரணமாக உள்ளன.
மேலும், முகிதீன் ஆரிஃப்பை அகற்றி அசாரை நியமிப்பதில் வெற்றி பெற்றால், அவரது நிலைப்பாடு வலுவடையும் என்றும் காதிர் கூறினார்.
“டாக்டர் மகாதீரின் நம்பிக்கையில்லா தீர்மானம் மிகவும் கடினமான பாதையை எதிர்கொள்ளும்.”
“ஆனால் விளைவு என்னவாக இருந்தாலும், கோவிட்-19 தொற்றுநோயின் மீட்பு கட்டத்திற்குள் நுழைந்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் இவ்வேளையில் நாட்டின் மற்றும் மக்களின் நலனே இறுதி நோக்கமாக இருக்க வேண்டும்,” என்று அவர் எழுதினார்.