வான் சைஃபுல்: அன்வாரை பிரதமராக ஏற்க டாக்டர் மகாதீர் ஒத்துழைக்கவில்லை

முன்னாள் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது, அன்வார் இப்ராஹிம் அவருக்குப் பதிலாக பிரதமராக வருவதை ஒருபோதும் விரும்ப வில்லை என்று பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.

பெர்சத்து தலைவர்களுடனான பல்வேறு சந்திப்புகளில் மகாதீர் தனது நோக்கத்தை தெளிவாகக் கூறியதாக ஒரு கட்டுரையின் மூலம் வான் சைபுல் கூறினார்.

14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு வான் சைபுலும் கலந்து கொண்ட பல்வேறு இரகசிய கலந்துரையாடல்களிலும் கூட்டங்களிலும், மகாதீர் ஒரு விசயத்தில் பகிங்கரமாக உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தார். அதாவது, அவருக்குப் பதிலாக அன்வாரை பிரதமராகப் பார்க்க அவர் விரும்பவில்லை.

“மகாதீரைப் பொறுத்தவரை, அன்வார் என்பவர் மலாய்க்காரர்களுக்காகப் போராடவோ அல்லது மத்திய அரசியலமைப்பினால் மலாய்க்காரர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பேணவோ மாட்டார் என்பதே அவரின் கருத்து.”

“பெர்சத்து, அம்னோ மற்றும் பாஸ் ஆகிய மூன்று பெரிய கட்சிகள் ஒன்றுபட்டால், மலாய் தலைமையிலான ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கும் என்றும், அது சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் டிஏபி மற்றும் பல இனங்களைக் கொண்ட பாக்காத்தான்-பி.கே.ஆர் கட்சிகளை ஒழித்து அன்வாரின் திட்டத்தை முறியடிக்க முடியும் என்றும் மகாதீர் நம்பினார்,” என்று வான் சைஃபுல் கூறினார்.

மகாதீர் மீதான அன்வாரின் மென்மையான அணுகுமுறை குறித்தும் வான் சைபுல் குற்றம் சாட்டினார்.

வான் சைஃபுலின் 54 பக்க கட்டுரை, “Trends in Asia” தொடரில் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுரையின் முதல் பகுதியின் பெரும்பகுதி டிஏபி மற்றும் பி.கே.ஆர் போன்ற “மலாய் அல்லாத கட்சி” ஆதிக்கம் செலுத்தும் பாக்காத்தான் அரசாங்கத்திற்கு எதிரான மலாய்க்காரர்களின் கவலையை விவரிக்கிறது.

அதோடு, மகாதிர் எப்போது விலகுவார், அன்வார் எப்போது பிரதமர் ஆவார் என்பது தொடர்பான சர்ச்சைகள், தொடர்ச்சியான நிகழ்வுகளுக்கு வழிவகுத்து, பெர்சத்து பாக்காத்தானிலிருந்து வெளியேறவும் வழிவகுத்தது.

வான் சைஃபுலின் கூற்றுப்படி, 2019 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மகாதீர் தலைமையிலான பெர்சத்து உச்ச மன்ற கூட்டம், பெர்சத்து, அம்னோ மற்றும் பாஸ் இடையே சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து உரையாடலைத் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தது. லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஜைனுதீனுக்கு இந்த உரையாடலை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

மகாதீர் பின்னர் மலேசியர்களை ஒன்றிணைக்கும் திறனை வெளிப்படுத்துமாறு தேசிய காங்கிரசிடம் கேட்டுள்ளார். இதன் விளைவாக Kongres Maruah Melayu அக்டோபர் 6, 2019 அன்று நடைபெற்றது என்றும் வான் சைபுல் கூறினார்.

“மகாதீர் அதில் ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். அதன் பிறகு அவர் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் அம்னோ பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா ஆகியோருடன் ஒரே மேடையில் நின்றார். அன்று அவரது தலைமையில் மூன்று முக்கிய மலாய் கட்சியின் சங்கமத்தை அது தொடக்கி வைத்தது.”

“இருப்பினும், அன்வார் கடைசி நிமிடம் வரை அழைக்கப்படவில்லை, அவர் கலந்து கொள்ளவும் இல்லை,” என்று அவர் கூறினார்.

பெர்சத்து, அம்னோ மற்றும் பாஸ் இடையேயான ரகசிய ஒத்துழைப்பின் முதல் படியாக மலாய் காங்கிரஸ் அமைந்தது என்று வான் சைஃபுல் கூறினார். இதில் மகாதீரின் பங்கு அளப்பரியது என்றார்.

அரசியல் எதிரிகளாக இருந்தாலும், அந்த காங்கிரசின் மூலம் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளை ஏற்றுக்கொண்டு, பாக்காத்தான் ஹராப்பானில் இருந்து வெற்றிகரமாக விலகிவிட்டார் மகாதீர் என்றார் வான் சைஃபுல்.

“பொதுவில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் பெர்சத்துவின் எதிரியாக சித்தரிக்கப்பட்டாலும், திரைக்கு பின்னால், மிக உயர்ந்த மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.”

“அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள் ஹம்சா மூலம் மட்டும் பெர்சத்துவுடன் தொடர்பு கொள்ளவில்லை. மகாதீருடன் அவர்களும் நல்ல உறவைக் கொண்டுள்ளனர். தனிப்பட்ட கலந்துரையாடல்களுக்காக தனிப்பட்ட முறையில் அவரை பலமுறை சந்திக்கின்றனர்” என்று வான் சைபுல் கூறினார்.

பாக்காத்தான் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகள் குறித்து வான் சைஃபுல், அம்னோவுடன் ஒத்துழைக்க மகாதீர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும், பிப்ரவரி 23 அன்று நடந்த பெர்சத்துவின் உச்ச மன்ற கூட்டத்தில் அன்வாருக்கு வழிவகுத்ததாகவும் கூறினார்.

அதுவரை, மலாய்க்காரர்கள் தலைமையில் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க மகாதீர் முயற்சிக்கிறார் என்ற கருத்தில் பெர்சத்து தலைவர்கள் இருந்தனர் என்றார் வான் சைஃபுல்.

அரசாங்க மாற்றத்தில் முகிதீனின் பங்கு குறித்து எழுதிய வான் சைஃபுல், பிப்ரவரி 24 ஆம் தேதி மகாதீர் பிரதமர் மற்றும் பெர்சத்துவின் அவைத் தலைவர் பதவியில் இருந்து விலகியதும், முகிதீன் அப்பதவியை ஏற்க வேண்டியது ஆனது என்று கூறினார்.

பெர்சத்துவின் செயல் தலைவராக, அக்கட்சியை பாக்காத்தானில் இருந்து வெளியேற்றுமாறு உச்ச மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்ற முகிதீன் முடிவெடுத்தார்.

“அந்த நாளில் முகிதீன் சமாளிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை ஒன்று இருந்தது. மகாதீர் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும், பாக்காத்தான் இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால், தனக்கு போதுமான ஆதரவு இருப்பதாகக் கூற அன்வாருக்கு திடீரென கதவு திறக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

முகிதீன் எவ்வாறு பிரதமரானார் என்பது குறித்து வான் சைஃபுல், அவர் பிப்ரவரி மாதம் மகாதீரிடமிருந்து ஆதரவைப் பெற்றதாகக் கூறினார்.

இது, முகிதீன் பிரதமராக பரிந்துரைக்கப்படுவதற்கும், மலாய்க்காரர்கள் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அசல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் வாய்பை அளித்தது என்று வான் சைஃபுல் கூறினார்.

அடுத்த நாள், முகிதீனுக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான ஆதரவு கிடைத்தது.

இறுதியாக, பாக்காத்தானின் வீழ்ச்சிக்கு சில காரணங்களை அளித்து தன் கட்டுரையை முடித்தார் வான் சைஃபுல். மலாய்க்காரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான பெர்சத்துவின் முயற்சிகள், கட்சியின் நடைமுறைவாதக் கொள்கை மற்றும் அரசியல் யதார்த்தங்களுக்கு ஏற்ப இல்லாத பாக்காத்தான் கட்சி (சீர்திருத்தங்களுக்கு முன் பாக்காத்தான் அரசாங்கம் மலாய்க்காரர்களின் நலன்களை முன் வைத்திருக்க வேண்டும்) ஆகிய காரணமாக பாக்காத்தான் அரசாங்கம் தோல்வியுற்றது என்றார் வான் சைஃபுல்.

“மலேசியாவை ஆள விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது கூட்டணியும் பெரும்பான்மையினரின் உணர்வுகளை புறக்கணிக்க முடியாது என்பது தெளிவாகிறது.”

“டிஏபி மற்றும் ஓரளவிற்கு பி.கே.ஆர் ஆகியோரால் வெற்றிபெறும் என்று கருதப்படும் சமத்துவ கொள்கைகளை ஏற்க மலாய்க்காரர்கள் தயாராக இல்லை,” என்று அவர் கூறினார்.