மூன்று முக்கிய அரசியல் முகாம்களுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தனித்தனியாக கூட்டங்களை நடத்தினர்.
ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் தேசிய கூட்டணி (பி.என்) மத்திய அரசைக் கைப்பற்றிய பின் நடக்கும் முழு அமர்வாக நாளைய நாடாளுமன்ற அமர்வு அமையும்.
நாடாளுமன்ற அமர்வுக்கும் முன்னதாக கூட்டங்களை நடத்துவது பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு பொதுவானவை என்றாலும், நாளைய அமர்வின் நிலைமையை ஊகிப்பதற்கு இன்றைய கூட்டங்கள் முக்கியமானதாக அமைகின்றன.
பிரதமர் முகிதீன் யாசின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளாரா என்பதைத் தீர்மானிக்க அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியிலிருந்து பல தீர்மனத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், நாடாளுமன்ற கூட்டம், விதிகள் பட்டியலின் கீழே இருப்பதால் அவை நாளையே தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்ப்புகள் இல்லை.
நாளை தாக்கல் செய்யப்படும் முதல் தீர்மான முன்மொழிவுகளில் ஒன்று முகிதீனுடையதாகும். அது, முகமட் ஆரிஃப் யூசோஃப் மற்றும் ஙா கோர் மிங் ஆகியோரை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவாகும். இரு பதவிகளும் பாக்காத்தான் நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்டவை ஆகும்.
எவ்வாறாயினும், முகமட் ஆரிஃப் மற்றும் ஙாவின் தலைவிதியை தீர்மானிக்கும் திட்டம் முகிதீனின் தலைவிதியையும் தீர்மானிக்கும் அளவுகோலாகக் காணப்படுகிறது.
முகமட் ஆரிஃப் மற்றும் ஙாவை நீக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து முகிதீன் போதுமான ஆதரவைப் பெறத் தவறினால், பிரதிநிதிகள் சபையில் அவருக்கு இன்னும் போதுமான ஆதரவு இல்லை என்று அர்த்தமாகும்.
மறுபுறம், முகிதீன் போதுமான ஆதரவைப் பெற்றால், பிரதமர் பதவியைப் பாதுகாக்க அவருக்கு வலுவான அடித்தளமாக அமையும்.
மலேசியாகினி பெற்ற தகவல்களின்படி, தேசிய கூட்டணி, பாக்காத்தான் ஹராப்பான் மற்றும் டாக்டர் மகாதிர் முகமது தலைமையில் வாரிசான் தலைவர்கள் மற்றும் முன்னாள் பெர்சத்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு கூட்டம் என மூன்று தலைமைக் குழுவினரால் குறைந்தது நான்கு கூட்டங்கள் இன்று நடத்தப்பட்டன.
தேசிய கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் பாரிசான் (பி.என்), இன்று காலை 11 மணிக்கு புத்ரா உலக வாணிப மையத்தில் சந்தித்ததாக கட்சி வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன. அங்கு அம்னோ எம்.சி.ஏ, எம்.ஐ.சி மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய கூறு கட்சிகள் சுமார் மூன்று மணி நேரம் சந்தித்தன.
இந்த கூட்டத்திற்கு பாரிசான் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் தற்போது பாரிசான் ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டம் மதியம் 1 மணியளவில் முடிந்தது. அதன்பிறகு, அவர்கள் பாஸ், பெர்சத்து, ஜி.பி.எஸ், பிபிஎஸ், ஸ்டார் மற்றும் முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியின் குழுவை சந்திக்க புத்ராஜெயாவில் உள்ள புஸ்பனிதாபுரி கட்டிடத்திற்குச் சென்றனர்.
மதியம் 3 மணிக்கு முகிதீன் மற்றும் அஸ்மினின் உரைகளுடன் கூட்டம் தொடங்கியது.
கட்டிடத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படதில்லை, வெளியே காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில், நஜிப் (பெக்கன் நாடாளுமன்ற உறுப்பினர்), பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி (பெரா), வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் (செம்ப்ரோங்), அம்னோ பொதுச்செயலாளர் அகமட் மஸ்லான் (பொந்தியான்) மற்றும் பாஸ் ஜெராய் நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரி அஜித் ஆகியோர் அடங்குவர்.
கூட்டம் இரண்டு மணி நேரம், மாலை 5 மணி வரை நீடித்தது.
எதிர்க்கட்சி தரப்பில், பாக்காத்தான் தலைவரான பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், மகாதீரின் குழு உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஒரு கூட்டத்தை நடத்த அழைத்தார்.
இன்று மதியம் 3 மணிக்கு சுபாங் ஜெயாவில் உள்ள ஹோட்டலில் கூட்டம் தொடங்கியது.
அன்வார் மற்றும் அவரது மனைவி வான் அஜிசா வான் இஸ்மாயில் மதியம் 2.45 மணியளவில் கூட்டத்திற்கு வந்தனர்.
கூட்டத்தில் மகாதீர் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கலந்து கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
முகிதீன் தலைமையிலான தேசிய கூட்டணிக்கு எதிராக பாக்காத்தான் மற்றும் மகாதீர் இணைந்து செயல்பட்டு வந்தாலும், பிரதமர் வேட்பாளரின் பிரச்சினையில் அவர்கள் இன்னும் சமரசம் ஆகவில்லை.
அன்வார், மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீரை அழைத்ததாகவும், மகாதீரை அழைக்கவில்லை என்றும் மகாதீர் முகாமின் அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இருப்பினும், மாலை 4.30 மணியளவில் முடிந்த இக்கூட்டத்தில் மகாதீர் மற்றும் வாரீசன் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் வரவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும், டிஏபி மற்றும் அமானா தலைவர்கள் நேற்று மூன்றாவது கூட்டணியை சந்தித்து தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். அந்த கூட்டத்தில் பி.கே.ஆர் இல்லை என தெரிகிறது.
மகாதிர் மற்றும் வாரீசன் குழுக்கள் தங்களது தனி கூட்டங்களை இன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் நடத்தியதாக மலேசியாகினிக்கு தகவல் கிடைத்தது.
சமீபத்திய வாரங்களில், டிஏபி மற்றும் அமானா கட்சிகள் அன்வார் குழுவிற்கும் மகாதீர் குழுவிற்கும் இடையில் பேச்சுவார்த்தையாளராக செயல்பட்டு வருகின்றனர்.