கோவிட்-19: மலேசியாவில் மீண்டும் 2 இலக்க தினசரி பாதிப்புகள்

கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் மீண்டும் இரட்டை இலக்கங்களுக்கு திரும்பியுள்ளன. இன்று 14 உள்ளூர் பாதிப்புகள் மற்றும் வெளிநாட்டில் ஏற்பட்ட மூன்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பாதிப்புகளைத் தொடர்ந்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,718 ஆக உள்ளன. 77 பாதிப்புகள் செயலில் உள்ளன.

“புதிய பாதிப்புகளில், மூன்று மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்புகள். நாட்டில் ஏற்பட்ட 11 பாதிப்புகளில் மூன்று மலேசியர்கள் மற்றும் எட்டு மலேசியர்கள் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ளூர் மக்கள் சம்பந்தப்பட்ட நோய்த்தொற்று பாதிப்புகளில் ஒன்று சபாவிலும் மற்றும் இரண்டு சரவாக்கிலும் கண்டறியப்பட்டுள்ளன.

“நாட்டில் மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட எட்டு நோய்த்தொற்றுகள் செப்பாங் குடிநுழைவு தடுப்பு முகாமில் ‘நோயாளி 8,629’ மற்றும் ‘நோயாளி 8,630’ உடன் நெருக்கமான தொடர்பு கொண்ட பாதிப்புகள் ஆகும்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நான்கு பாதிப்புகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டன. இதுவரை குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,519 அல்லது மொத்த பாதிப்புகளில் 97.7 சதவீதம் ஆகும்.

டாக்டர் நூர் ஹிஷாம் இன்று புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றார். எனவே நேற்று பதிவான ஒரு புதிய இறப்பு உட்பட, பாதிப்பின் காரணமாக இன்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 122 அல்லது மொத்த பாதிப்புகளில் 1.39 சதவீதமாக உள்ளது என்றார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) மூன்று பாதிப்புகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவற்றில் இரண்டு பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.