சபாநாயகரை நீக்கும் தீர்மானம், சூடுபிடித்தது நாடாளுமன்றம்

சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப் நீக்கப்படுவதற்கான தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் சூடுபிடித்தது.

சபாநாயகர் முகமட் ஆரிஃப்பை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் முகிதீன் யாசின், சபாநாயகர் இருக்கை காலியாக உள்ளது என்ற அடிப்படையில் ஆரிஃப்பை மாற்றுவதற்கான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

“முகமட் ஆரிஃப் அவர்களுக்கு மற்ற பதவிகள் உள்ளன என்ற அடிப்படையில் அவர் சபாநாயகர் பதவியை காலி செய்ய நான் பரிந்துரைக்கிறேன்” என்று முகிதீன் கூறினார்.

இந்த திட்டத்தை கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அஸ்மின் அலி ஆதரித்தார்.

பின்னர் துணை சபாநாயகர் ரஷீத் ஹஸ்னான் அத்தீர்மானத்தை விவாதிக்க அனுமதித்தார்.

முகிதீன் முன்வைத்த தீர்மானத்தை 10 நிமிடங்களுக்குள் விவாதிக்க அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் இரண்டு பிரதிநிதிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ரஷீத் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். வாக்கெடுப்புக்கு முன்னர் விவாதங்கள் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று அவரிகள் விரும்பினர்.

இருப்பினும், இரண்டு உறுப்பினர்களின் விவாதத்தை மட்டும் கேட்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியாயமற்றது என்று கூறி அன்வார் இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

“தீர்மானம் விவாதிக்கப்படுவதைத் தடுக்கும் ஒரு முடிவை துணை சபாநாயகர் எடுக்க வேண்டாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.”

“இது வரலாற்றில் ஒரு மிகப் பெரிய மற்றும் முதல் முறையாக எழுந்துள்ள பிரச்சினை என்பதால் இதை இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்த எந்த காரணமும் இல்லை” என்று அவர் கூறினார்.

ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் சாமாட்டும் ரஷீத்தின் உத்தரவு குறித்து கேள்வி எழுப்பினார்.

முகமட் ஆரிஃப் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார், மேலும் அவரை நீக்க எந்த காரணமும் இல்லை காலித் கூறினார்.

“நீக்கப்படும் அளவிற்கு முகமட் ஆரிப் என்ன தவறு செய்தார்” என்று அவர் மேலும் கேட்டார்.

பிரதமர் துறையின் அமைச்சர் தக்கியுதீன் ஹசான், சபாநாயகரை மாற்றுவதற்கான முடிவை தெளிவுபடுத்த எழுந்தார்.

இருப்பினும், தக்கியுதீன் விளக்கம் அளிக்கும் முன்பாக, முகமட் சாபு குறுக்கிட்டு ரஷீத்தை ‘முட்டாள்’ என்று அழைத்தார்.

“முட்டாள் சபாநாயகர், முட்டாள் சபாநாயகர்” என்றார் முகமட் சாபு.