உள்துறை அமைச்சு விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ள அம்பாங் எம்பி சுரைடா கமருடின், வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கி “ஆவி வாக்காளர்கள்” உருவாக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரங்களைக் காண்பிப்பதாகச் சூளுரைத்துள்ளார்.
“இப்போது எதையும் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. ஏனென்றால் போலீஸ் அதிரடிச் சோதனை போன்ற குறுக்கீடு நிகழ்வதை நான் விரும்பவில்லை. எல்லா ஆதரங்களுடனும் போலீசில் புகார் செய்வேன், இவ்வாரத்திலேயே அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.
வெளிநாட்டவருக்கு எளிதாகவும் விரைவாகவுக் குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறும் அவர், அது குறித்து போலீசில் புகார் செய்யலாமே என்று உள்துறை தலைமைச் செயலாளர் மஹ்கூட் ஆதம் கூறியதற்கு மறுமொழியாக பிகேஆர் மகளிர் தலைவியான சுரைடா இவ்வாறு மொழிந்தார்.
குடியுரிமை வழங்கப்பெற்ற அந்நிய குடியேறிகள், மலேசியாவில் தொடர்ந்து இருக்க நினைத்தால் அம்னோவுக்கும் பிஎன்னுக்கும் விசுவாக இருக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுத்துவதாகவும் சுரைடா கூறியுள்ளார்.