அசார் அஜீசான் புதிய சபாநாயகராக வாக்களிக்காமலே நியமிக்கப்பட்டார்

முகமட் ஆரிஃப் யூசோப்பிற்குப் பதிலாக புதிய சபாநாயகராக தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அசார் அஜீசான் ஹாருன் இன்று நியமிக்கப்பட்டார்.

அசார் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பிரதமர் முகிதீன் யாசினின் தீர்மானத்திற்கு முன்னர், எதிர்க்கட்சியினரும் தங்கள் சபாநாயகரின் பெயரை முன்மொழிய விரும்புவதாகக் கூறினர்.

இருப்பினும், பிரதமர் துறை அமைச்சர் தக்கியுதீன் ஹாசன், சபாநாயகர் நியமனத்திற்கு 14 நாட்கள் அறிவிப்பு தேவை என்றும், எதிர்க்கட்சி அந்த 14 நாள் காலகட்டத்தில் யாரையும் பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதன் பின் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, துணை சபாநாயகர் ரஷீத் ஹஸ்னான் எதிர்க்கட்சியினர் ஒரு புதிய சபாநாயகரை பரிந்துரைக்கும் நேரம் கடந்துவிட்டது என்று முடிவு செய்தார்.

அசார் பின்னர் சபையின் புதிய சபாநாயகராக பதவியேற்றார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சியினர் அசாரின் நியமனம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது பதவியேற்பு விழா சலசலப்பானது.

காலித் அப்துல் சமாட் (அமனா-ஷா ஆலம்) அசாரை “பின் கதவு சபாநாயகர்” என்று அழைத்தார்.

அசார் அவரைப் புறக்கணித்து தனது உரையைத் தொடர்ந்தார், தன்னை நியமித்ததற்கு முகிதீனுக்கு நன்றி கூறினார்.

இருப்பினும், எதிர்க்கட்சி தொடர்ந்து “வாக்களியுங்கள்! வாக்களியுங்கள்! வாக்களியுங்கள்!” என்று கூச்சலிட்டனர்.

தனது நியமனம் தொடர்பான பிரச்சினை, விதி46, நாடாளுமன்ற விதிகளின் கீழ் தீர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.

“இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு நான் பதவியேற்றுள்ளேன். மாண்புமிகு ஈப்போ பாராட் (எம். குலசேகரன்) விதிகளை குறிப்பிடுகிறார், நானும் விதிகளையும் குறிப்பிடுகிறேன்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக குலசேகரன் (பி.எச்-ஈப்போ பாராட்), சபாநாயகர் நியமனம் குறித்து நாடாளுமன்ற விதிகளை எழுப்பிய பின்னர் அசார் இவ்வாறு கூறினார்.

பின்னர் காலித் அப்துல் சமாட் (பி.எச்-ஷா ஆலம்) எழுந்து சபாநாயகரின் தொடக்க உரையில் குறுக்கிட்டார்.

“தயவுசெய்து வெளியே செல்லுங்கள்” என்றார்.

காலித் பின்னர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, அசார் தனது உரையைத் தொடர்ந்தார்.