பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான், பத்து காவான் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவின் தோலின் நிறம் குறித்து இழிவாக கிண்டல் அடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
“அவர் கருப்பாக இருக்கிறார், கண்ணுக்கு தெரியவில்லை” (“gelap, tak nampak”) என்று அஜீஸ் கூறினார்.
பெண்கள் உறுப்பினர்களின் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த கஸ்தூரி, ஆரம்பத்தில் அதில் கவனம் செலுத்தவில்லை. ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் பின் எழுந்து, அப்துல் அஸீசை தனது வார்த்தைகளை மீட்டுக் கொள்ளும்படி கேட்டார்.
இதனால் அஜீஸ் எழுந்து “நானும் தான் கருப்பாக இருக்கிறேன், கருப்பாக இருப்பது ஒரு பிரச்சினையாகுமா..” என்றார்.
“அவர் அல்லது ஒய்.பி. கருப்பாக இருக்கிறார் என்று நான் சொல்லவில்லை. நானும் கருப்பாக இருக்கிறேன், முகப்பூச்சு (பவுடர்) பூசிக்கொள்ளுங்கள்” என்று பல எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் கூறினார். தனது கிண்டல் வார்த்தைகளை மீட்டுக்கொள்ளுமாறு அஜீஸை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அதன்பிறகு, கஸ்தூரி விதி 36ஐ மேற்கோள் காட்டி, பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள், பிறரை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது அல்லது பாலினத்தின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமானதல்ல என்று கூறினார்.
அஜீஸ் அவரை கருப்பானவர் என்று அழைத்ததோடு மட்டுமல்லாமல், முகப்பூச்சு (பவுடர்) பூசிக்கொள்ளும்படியும் கூறியுள்ளார் என்று கஸ்தூரி மேலும் கூறினார்.
“இது இனவெறி” என்று ராயர் அவரைப் பின்தொடர்ந்தார்.
அஜீஸ் மற்றும் பல அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகப்பூச்சு (பவுடர்) பூசிக்கொள்வதில் தவறில்லை என்று கூறினார்கள்.
இதற்கிடையில், பெரும்பாலான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கிண்டல் பேச்சுகளை ஏன் எதிர்க்கவில்லை என்று கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.
புதிய சபாநாயகர் அசார் ஹாருன் நிலைமையை அமைதிப்படுத்த முயற்சித்தார்.
இருப்பினும், கூட்டத்தை நாளை காலைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தக்கியுதீன் முன்மொழிந்த பின்னர் இந்த சர்ச்சை சபையில் ஒரு முடிவுக்கு வந்தது.