நேற்று சபாநாயகரை நியமிக்க நடைபெற்ற வாக்களிப்பின் முடிவு தற்போதைய அரசாங்கம் செயல்படுவது சற்று கடினம் என்பதை நிரூபித்துள்ளது என்று முன்னாள் அம்னோ அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய முடிவு ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கு முகிதீன் யாசின் ஆதரவைக் கொண்டுள்ளார் என்பதைக் காட்டினாலும், அந்த ஆதரவு போதுமானதாக இல்லை என்பதையும் அரசாங்கம் நிலையற்ற தன்மையில் உள்ளது என்பதையும் காட்டியுள்ளது என்று அகமட் ஷபரி சீக் கூறினார்.
மக்களிடமிருந்து ஒரு ஆணையைப் பெறுவதே நிலைமையைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியாகும் என்றும் அகமட் ஷபரி கூறினார்.
“அரசாங்கம் செயல்படுவது கடினம். நாடாளுமன்றத்தை கலைப்பதே சிறந்த வழி. புதிய ஆணையைப் பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பொதுத் தேர்தல் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான சிறந்த படியாகும் என்று கருதுவதாக அம்னோ இளைஞர் எக்ஸ்கோ முஸ்தபா ஷா அப்துல் ஹமீட் கூறியுள்ளார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், எளிய பெரும்பான்மை எண்ணிக்கையில் மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்குவது மிகவும் கடினம் என்று அவர் விளக்கினார்.
“நாட்டை வழிநடத்த சிறந்த பெரும்பான்மையுடன் மக்களின் ஆணையை அரசாங்கம் திரும்பப் பெற பொதுத் தேர்தல் மட்டுமே சிறந்த வழி ஆகும்.”
“அரசாங்கம் இப்போது செய்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளின் மூலம், மக்களின் ஆதரவு தேசிய கூட்டணிக்கு உள்ளது எனலாம். இதனால், ஒரு சிறந்த பெரும்பான்மையில் அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.”
“ஒரு நிலையற்ற அரசாங்கம் மக்களின் நல்லிணக்கத்தை பாதிக்கும், இதுபோன்ற சூழ்நிலையில் பல நல்ல கொள்கைகளை செயல்படுத்துவது கடினம்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேசிய கூட்டணி இப்போது ஒரு ஆணை இல்லாத அரசாங்கம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அக்கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் – பெர்சாட்டு தவிர – கடந்த 14வது பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்காளர்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதே இதற்கு காரணம்.