பிரதமர் முகிதீன் யாசின் 1எம்.டி.பி தொடர்பான கேள்விகளைத் தவிர்த்து ஒளிந்து கொண்டிருப்பதாக டிஏபி எம்.பி. டோனி புவா கூறினார்.
1எம்.டி.பி ஊழல் குறித்த தனது கருத்துக்களைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த நஜிப் ரசாக் அவர்களால் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஒரு வருடம் கழித்து அம்னோவிலிருந்தும் நீக்கப்பட்டார் முகிதீன், என்று புவா தன் முகநூலில் பதிவிட்டார்.
வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் 1எம்.டி.பி ஊழல் குறித்து புவா கேட்ட இரண்டு கேள்விகள் நிராகரிக்கப்பட்டன.
கேள்விகளை நிராகரித்து, பிரதிநிதிகள் சபையின் செயலாளர் நிஜாம் மைடின் பச்சா மைடின் கையெழுத்திட்ட கடிதத்தையும் புவா பதிவேற்றியுள்ளார்.
சபாநாயகர் அலுவலகம் கேள்விகளை நிராகரித்த போதிலும், இந்த முடிவு குறித்து புவா மீண்டும் முகிதீனை விமர்சித்தார்.
“RM50 பில்லியன் மதிப்புள்ள 1எம்.டி.பி ஊழல் தொடர்பாக முன்பு நஜிப்பை கடுமையாக விமர்சித்த ‘ஹீரோ’ முகிதீன். ஆனால் இப்போது, நஜிப்-1எம்.டி.பி ஊழல் விசாரணை வழக்கில் அட்டர்னி ஜெனரலின் (ஏஜி) நிலைப்பாடு குறித்து கேட்கும் போது, முகிதீன் ‘சப்ஜுடிஸ்’ என்கிறார். அதாவது விசாரணை நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டு இன்னும் தீர்க்கப்படாத நிலையில், வேறு இடங்களில் பொது விவாதத்திற்கு அவசியமில்லை என்றுள்ளார்.
“அன்புள்ள பிரதமரே, இந்த வழக்கைப் பற்றி நான் கேட்கவில்லை, அதில் ‘சப்ஜுடிஸ்’ இருக்கலாம். வழக்கில் (புதிய) ஏஜி-யின் நிலைப்பாட்டை பற்றி நான் கேட்கிறேன். ஏஜி-யின் நிலைப்பாடு எவ்வாறு ‘சப்ஜுடிஸ்’ ஆக முடியும்?” என்று புவா கேள்வி எழுப்பியுள்ளார்.
1எம்.டி.பி-உடன் இணைக்கப்பட்ட 248 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி சம்பந்தப்பட்ட பண மோசடி குற்றச்சாட்டில், கடந்த மே மாதம் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும் நஜிப்பின் வளர்ப்பு மகனுமாகிய ரிசா அப்துல் அஜீஸின் “விடுதலை” குறித்து தான் கேள்விகளைக் கேட்க விரும்புவதாக புவா கூறினார்.