‘உறுப்பினர்களை தொடர்ச்சியாக பதவி நீக்கம், இடைநீக்கம் செய்வது முறையல்ல’ – கரீப்

மத்திய மற்றும் மாநில மட்டங்களில் பி.கே.ஆர் கட்சித் தலைமையின் மீதான நம்பிக்கையை இழந்ததன் அடிப்படையில், கட்சியிலிருந்து வெளியேறுவதாக பி.கே.ஆர் ஜெம்போல் கிளை தலைவர் கரீப் முகமட் சல்லே மற்றும் 26 உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இக்குழுவிற்கு தலைமை தாங்கிய கரீப், உள் நெருக்கடியை தீர்க்க பி.கே.ஆர் தலைமை தவறியதாகவும், இதனால் பாக்காத்தான் ஹராப்பான் மத்திய அரசு கவிழ்ந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

“தொடர்ச்சியாக உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதும் இடைநீக்கம் செய்வதும் ஒரு முறையான நடவடிக்கை இல்லை.”

“இன்று கட்சியை விட்டு வெளியே வந்தவர்களில் பெரும்பாலோர் ஜெம்போல் கிளைக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர், அவர்களில் சிலர் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள். கடந்த ஏப்ரல் மாதம் நானும் இடைநீக்கம் செய்யப்பட்டேன். இது குறித்து நாங்கள் மேல்முறையீடு செய்ய மாட்டோம்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்தையும் இந்த குழு முழுமையாக ஆதரிப்பதாக கரீப் கூறினார்.