தந்தையைப் போலவே மகன் – முக்ரிஸ் மகாதீரை பார்த்து தாஜுதீன் கூறுகிறார்

நாடாளுமன்றம் | இன்று நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை இணைத்த 1எம்.டி.பி நிறுவன நிதி முறைகேடு தொடர்பான பிரச்சினையை முக்ரிஸ் மகாதிர் (பேபாஸ்-ஜெர்லுன்) எழுப்பியபோது, தாஜுதீன் அப்துல் ரஹ்மான் (பி.என்-பாசிர் சாலக்) கோபமடைந்தார்.

தற்போது நீதிமன்றத்தில் உள்ள வழக்கை பற்றி முக்ரிஸ் எழுப்பி, அரசியல் நியமனங்கள் தொடர்பான பிரச்சினையைத் தொடும்போது, அது அதிகார முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

“அரசியல்வாதிகள் அரசு அல்லது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும்போது இது அனைத்தும் செய்யப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

எனவே, அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜி.எல்.சி.) அரசியல்வாதிகளை நியமிக்கும்போது, 1எம்.டி.பி. போன்ற முறைகேடு தொடர்பான வழக்குகளில் இருந்து நாடு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முக்ரீஸ்.

அப்போது மீண்டும் மீண்டும் 1எம்.டி.பி. பிரச்சினையை எழுப்புவதாக கூறி, முக்ரீசின் விவாதத்தில் குறுக்கிட்டார் தாஜுதீன்.

“மாண்புமிகு முக்ரீஸ் அவர்களின் அணுகுமுறையால் நான் வருத்தப்படுகிறேன். மீண்டும் மீண்டும் நஜிப், 1 எம்.டி.பி, நஜிப், 1 எம்.டி.பி. வேறு ஒன்றுமே இல்லையா என்று மக்களே கூறுகிறார்கள். மக்களாலும் அதை இனி ஏற்க முடியவில்லை.”

“மதிப்பிற்குரிய உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் பல்வேறு கதைகள் உள்ளன. சொல்ல வேண்டியது நிறையவே உள்ளன. எனவே தீர்ப்பளிப்பது போல குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம். 1எம்.டி.பி வழக்கை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.” என்று அவர் கூறினார். முக்ரிஸ் மகாதீர் பல நிறுவனங்களில் நிர்வாகக் குழு உறுப்பினராக இருப்பதாகவும் தஜுதீன் கூறினார்.

“இவரும், இவரது தந்தை (டாக்டர் மகாதீர் முகமட்) போலவே உள்ளார். மீண்டும் மீண்டும், முடிவே இல்லாமல்,” என்று அவர் மீண்டும் கூறினார்.

அந்த நேரத்தில், சபாநாயகர் அசார் அஜீசன் ஹருன் நிலைமையை அமைதிப்படுத்த முயன்றார், தாஜுதீனை அமைதிப்படுத்தி உட்காரச் சொன்னார்.

அப்போது முக்ரிஸ், தாஜுதீனின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல சவால் விடுத்தார்.

பிரசரனா மலேசியாவின் தலைவரான தாஜுதீன், தன்னிடம் ‘படச்சான்றுகள்’ மற்றும் முக்ரிஸ் தொடர்பான நிறுவனங்களின் பட்டியல் இருப்பதாகக் கூறி தனது குற்றச்சாட்டுகளை தற்காத்துப் பேசினார்.

பி.என் நிர்வாகத்தின் போது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து முக்ரிஸ் தனது விவாதத்தைத் தொடர்ந்தார் – மீண்டும் 1எம்.டி.பி.யை ஒரு எடுத்துக்காட்டாகக் கூறினார் – அந்த நேரத்தில் அம்னோ அதன் தலைவர்களின் தவறான நடத்தைகளைத் தடுக்க தவறிவிட்டது என்று கூறினார்.

இருப்பினும், தாஜுதீன் மீண்டும் குறுக்கிட்டு முக்ரிஸின் கூற்று குறித்து கேள்வி எழுப்பினார்.

“அம்னோவினால் தான் நீங்களே இங்கே இருக்கிறார்கள். அம்னோ இல்லை என்றால் உங்களிடம் எதுவும் இல்லை. அம்னோ இல்லாமல் நீங்கள் இல்லை.”

அதற்கு முக்ரிஸ், “நான் யாரும் இல்லை என்றால் நீங்கள் என்னை கண்டு பயப்படத் தேவையில்லை” என்று பதிலளித்தார்.