ஊழல் தடுப்பு ஆணையத்தில் 6 மணி நேரம் விசாரணையில் லிம்

ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்ட பின்னர், முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், இரவு 7.13 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து வெளியேறினார்.

இருப்பினும், அவர், இன்று பிற்பகல் முதல் காத்திருந்த ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணை தொடர்பாக லிம் சாட்சியமளித்ததை அவருடன் வந்த ஜெலுடோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் தெரிவித்தார்.

“ஆம். கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்து,” என்று அவர் கூறினார்.

“இது இன்னும் முடிவடையவில்லை. சனிக்கிழமை காலை 10 மணியளவில் திரும்பி வரும்படி நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம்.” என்று அவர் கூறினார்.

ஜூன் 30 அன்று, பினாங்கு துறைமுக ஆணையத்தின் (பிபிசி) முன்னாள் மூத்த அதிகாரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்தது. கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஊழல் கூறுகள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக பல சாட்சிகளை அழைத்தது.

மாநில அமைச்சர் சோவ் கோன் யோவ் மற்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உட்பட பல மாநில அரசு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்தது.

முன்னாள் பினாங்கு துறைமுக ஆணையத்தின் தலைவர் ஜெஃப்ரி செவ் ஜூலை 1 ஆம் தேதி விசாரணைக்கு உதவ நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இந்த திட்டம் திட்டமிடப்பட்டபோது, லிம் மாநில அமைச்சராகவும், செவ் அவரது சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார்.