தேசிய கூட்டணியைச் சார்ந்த பல அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, அவர்களில் சிலர் சபாநாயகரின் நிலையை இழிவுபடுத்தும் அளவுக்கு தங்களின் எல்லையை மீறி செயல்பட்டதாக கூறியுள்ளார் முன்னாள் சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோஃப்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தாம் ஒதுக்கி வைக்கப்படுவார் என்பதை அறிந்திருந்த முகமட் ஆரிஃப், அக்கூட்டணியின் மூத்த தலைவரே அவரை சபாநாயகர் பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தியபோது அது தெளிவானது என்று கூறினார்.
சில வாரங்களுக்குப் பிறகு, ‘தற்காலிகமாக சிறிது காலம் நாங்கள் சபாநாயகரை பதவியில் வைத்துக் கொள்வோம்’என்று மற்றொரு அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.
“அது சரியல்ல என்று நான் நினைக்கிறேன்.”
“தற்காலிகமாக” போன்ற சொற்களை நிர்வாகம் செய்யும் அவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?”
“இது சபாநாயகர் அலுவலகத்தை அவமதிப்பதாகும்” என்று முகமட் ஆரிஃப் மலேசிய இன்சைட் போர்ட்டலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
முகமட் ஆரிஃப் மலாயா பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாளராக இருந்துள்ளார். மே 2018 இல் பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை அமைத்தபோது, நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்படுவதற்கு முன்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஓய்வு பெற்றிருந்தார்.
இருப்பினும், பாக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததும், அவருக்கு பதிலாக ஒரு வழக்கறிஞரும் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அசார் ஹருனை தேசிய கூட்டணி அரசாங்கம் சபாநாயகராக நியமித்தது.
டிஏபி-யில் இருந்து துணை சபாநாயகராக இருந்த ஙா கோர் மிங்கிற்கு பதிலாக பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஓத்மான் சைட் நியமிக்கப்பட்டார்.
அசார் மற்றும் அசாலினா ஆகியோர் முகமட் ஆரிஃப்பின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய கூட்டணி புத்ராஜெயாவைக் கைப்பற்றியபின், நாடாளுமன்றத்தில் சபாநாயகராக அவரது நிலைப்பாடு நீண்ட காலம் நீடிக்காது என்பதற்கான சில அறிகுறிகள் தென்பட்டன என்றார் முகமட் ஆரிப்.
அப்படியிருந்தும், சபாநாயகராக தன் நிலையை நிலைநிறுத்தினால் அதில் நன்மைகள் இருப்பதை மக்கள் காண முடியும் என்று தான் நம்பியதாக முகமட் ஆரிஃப் கூறினார்.
மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒரு நாளுக்கு மேல் நீட்டிக்குமாறு பிரதமர் முகிதீன் யாசினுக்கு அறிவுறுத்தியதாகவும் ஆனால், முகிதீன் அவரை புறக்கணித்ததாகவும் முகமட் ஆரிஃப் தெரிவித்தார்.
சபாநாயகராக, அறிவுரைகளை மட்டுமே வழங்க முடியும் என்றும், நாடாளூமன்றத்தின் தலைவராக முகிதீனே முடிவு செய்ய முடியும் என்றார் முகமட் ஆரிஃப்.
சபாநாயகராக நீக்கப்பட்டதை விவரித்த முகமட் ஆரிஃப், அமானா கட்சியின் உறுப்பினராக இருந்ததால், நாடாளுமன்றத்தில் அவர் நியாயமாக இருக்க முடியாது என்பதை தேசிய கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக அவர் கூறினார்.
உண்மையில், முகமட் ஆரிஃப் சபாநாயகராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அமானா கட்சியை விட்டு விலகிவிட்டதாகக் கூறினார்.
சபாநாயகரை மாற்றுவதற்கான முன்மொழிவைப்பற்றி கூறுகையில், அதை பெற்ற உடனேயே தனது அலுவலகத்தால் உடனடியாக கையெழுத்திடப்பட்டது என்றார் முகமட் ஆரிஃப். ஆனால் அது தேசிய கூட்டணியின் அரசியல் முடிவு என்றும் அந்த நடவடிக்கைக்கு அவர் உடன்படுகிறார் என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றம் இன்னும் கலைக்கப்படாதபோது சபாநாயகரை நீக்குவது உலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்ததில்லை என்று முகமட் ஆரிஃப் கூறினார்.
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் மட்டுமே சபாநாயகரை நீக்க முடியும். அது தான் முறை.”
“டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டைத் தவிர, எந்த காமன்வெல்த் சபாநாயகரும் இப்படி மாற்றப்படவில்லை” என்று அவர் கூறினார்.
அதுவும், ஊழல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் அந்த சபாநாயகர் நீக்கப்பட்டார் என்றார் முகமட் ஆரிஃப்.