கோவிட்-19: 6 புதிய பாதிப்புகள், சரவாக்கில் பாதிப்புகள் அதிகரிப்பு

ஒன்பது புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று நண்பகல் வரை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில் 6 பாதிப்புகள் உள்நாட்டுப் பரவலுடன் தொடர்புடையவை.

ஆறு பாதிப்புகளில், நான்கு உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்டவை ஆகும். அந்த நான்கு பாதிப்புகளும் சரவாக் நகரில் நிகழ்ந்துள்ளன.

ஸ்டூடோங் திரளை, செந்தோசா திரளை, கூச்சிங் இன்ஜினியரிங் திரளை மற்றும் மேலும் ஒரு பாதிப்பு இன்னும் விசாரணையில் உள்ளது.

இன்னும் விசாரணையில் உள்ள நோயாளி எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்றும், இப்போது சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதனிடையே, சபாவில் ஓர் உள்நாட்டு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் கைதிகளைத் சோதனை செய்த போது அந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் ஒரு பாதிப்பு கிளந்தானில் கண்டறியப்ப்ட்டுள்ளது. இதுவும் சிறை கைதி சம்பந்தப்பட்ட பாதிப்பாகும்.

இதற்கிடையில், மொத்தம் எட்டு கோவிட்-19 நோயாளிகள் இன்று குணமடைந்துள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார். மொத்தமாக மீட்கப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 8,574 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்புகளில் 97 சதவீதமாகும்.

மொத்தம் ஐந்து நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) வைக்கப்பட்டனர், அவர்களில் இருவருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

நூர் ஹிஷாம் இன்று இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், மொத்த இறப்பு எண்ணிக்கை 123 ஆக உள்ளது என்றும் தெரிவித்தார். இது மொத்த பாதிப்புகளில் 1.39 சதவீதமாகும்.

கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 143 ஆக உள்ளது. இது கடந்த ஜூலை 9 ஆம் தேதியை விட இரண்டு மடங்கு அதிகம் என்று நூர் ஹிஷாம் கூறினார்.

கூடல் இடைவெளி மற்றும் சுகாதாரம் பேணுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இன்று அறிவித்தபடி பொதுப் போக்குவரத்திலும் நெரிசலான இடங்களிலும் முகக்கவரி அணிவது கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கையை அவர் வரவேற்றார்.

ஆனால், முகக்கவரியை சரியான முறையுடன் அணியும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.