‘மலாய்க்காரர்களை நேசித்தால், தியாகம் செய்யுங்கள்’ – என்று மூத்த அம்னோ அரசியல்வாதியான தெங்கு ரசாலீ ஹம்சா தனது சக கட்சியினர்களான அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாகிற்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த நேரத்தில் மக்கள் பார்வையில் அம்னோ ‘குறைபாடுடையதாக’ காணப்படுவதால் அவர்கள் இருவரும் விலகி, கட்சியின் தலைமையை மற்றவர்களுக்கு வழிவகுத்து கொடுக்கும் தியாகத்தை செய்ய முன்வர வேண்டும் என்று தெங்கு ரசாலி கூறினார்.
“மற்றவர்களுக்கு வழி விடுங்கள்” என்று அவர் கூறினார்.
அகமட் ஜாஹிட் மற்றும் நஜிப் மீண்டும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்களா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்றார் அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவரான தெங்கு ரசாலி.
ஆனால் கட்சியில் வலியுறுத்தப்பட்டபடி மலாய்க்காரர்களை உண்மையிலேயே நேசித்தால் அவர்கள் இருவரும் இத்தகைய தியாகத்தை செய்வது அவசியம் என்றார் தெங்கு ரசாலி.
அகமட் ஜாஹிட் அம்னோ தலைவராக உள்ளார். அவர் தற்போது நீதிமன்றத்தில் 12 நம்பிக்கை மோசடி வழக்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 50 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
மறுபுறம், நஜிப், நம்பிக்கை மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் 1MDB நிதி சம்பந்தப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அத்தகைய சூழ்நிலையிலும், நஜீப் 2019 ஜூன் மாதம் பாரிசான் கட்சியின் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டில் பாக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றிய பின்னர் அவர்கள் இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், பாக்காத்தான் தற்போது எதிர்க்கட்சியில் உள்ளது. அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பகுதியாக உள்ளது.
2018 ஆம் ஆண்டு அம்னோ தேர்தலில், தெங்கு ரசாலீ அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், அவர் அகமட் ஜாஹிதிடம் தோற்றார். போட்டியில் முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் மற்றும் இன்னும் இரண்டு வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
அகமட் ஜாஹிட் மற்றும் நஜிப் ஆகிய இருவரும் மற்ற விஷயங்களை விட அம்னோ கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் தெங்கு ரசாலீ.
“இல்லையெனில், நாம் (அம்னோ) முன்னேற முடியாது. தியாகம் முக்கியமானது, மதத்தில் கூட நாம் தியாகம் செய்ய வேண்டியது அவசியம் என்று கூறபட்டிருக்கிறது. நம் சமூகத்திலும் தியாகம் இருக்கிறது.
“சிறிது காலம் தான், ஐந்து ஆண்டு காலம் மட்டும் தான்” என்று அவர் கூறினார்.