அடுத்த பொதுத் தேர்தலில் அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற கனவை பி.கே.ஆர் கலைக்க வேண்டும் என்று வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சரின் அரசியல் செயலாளர் ஹிஸ்வான் அகமட் கூறினார்.
கடந்த வாரம் பி.கே.ஆர் அம்பாங்கில் ஒரு அடிமட்ட உறுப்பினர் மாநாட்டை நடத்தியதை தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அம்மாநாட்டில், அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தலைமையில் பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பாக்காத்தானுக்கு துரோகம் இழைத்தனர் என்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
கட்சியை விட்டு வெளியேறிய பி.கே.ஆர் தலைவர்களில், அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான ஜுரைடாவும், அம்பாங்கிற்கு அருகிலுள்ள கோம்பாக் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அஸ்மினும் அடங்குவர்.
எதிர்பார்த்தபடி அம்மாநாடு, பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் தனிப்பட்ட நோக்கத்தை முன்வைத்ததுடன், தேசிய கூட்டணியை அமைத்தவர்கள் துரோகிகள் என்றும் விவரிக்கப்பட்டனர் என்றார் ஹிஸ்வான்.
“மக்கள் சோர்வடைந்து, வெறுப்பு அடைகிறார்கள். கோவிட்-19 தொற்றுநோயால் நாடு மீண்டு வரும் சூழ்நிலையில், முழு நாடும் மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு தலைவரையே விரும்புகிறது.”
“இந்த விஷயத்தில், அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருமே ஒரு சிறந்த சேவைக்கான வரலாற்றை கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் மக்களால் அங்கீகரிக்கப்படுகிறார்கள். ஒளிவு மறைவு இன்றி இதை நம்மால் காண முடிகிறது.”
“எனவே இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றும் கனவை இனி காணாதீர்கள்.” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அம்பாங் மற்றும் கோம்பாக், பாரம்பரியமாக பி.கே.ஆர் தொகுதிகளாக இருந்து வருகின்றன. இரு நாடாளுமன்றங்களையும் மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சிகள், அஸ்மின் மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்குப் பிறகு கட்சிக்கு ஆதரவின் அளவை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான சோதனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.