மலாய் ஆதிக்கம் – வெள்ளையர் ஆதிக்கம், இரண்டிற்கும் வேறுபாடு இல்லை என்கிறது எதிர்க்கட்சி

இன்று அமானா கட்சியின் மக்கள் பிரதிநிதிகளில் சிலர், மலாய் மேலாதிக்கமும் வெள்ளையர் மேலாதிக்கமும் ஒன்றுதான் என்றார்கள். மேலும், இதுபோன்ற உணர்வுகள் எதிர்காலத்தில் இனக் கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

வாரிசான் கட்சியின் ஷாஃபி அப்டாலும், மலாய்க்காரர்கள் சிந்திக்க வேண்டும் என்றும், மற்ற இனங்கள் வெற்றி அடைந்து இருந்தால் அவர்களுக்கு எதிராக குறைகூறி செயல்பட வேண்டாம் என்றும் கூறினார்.

அமனா கட்சியின் தலைவர் முகமட் சாபு (பி.எச்- கோத்தா ராஜா), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரிக்கும் வெள்ளையர் மேலாதிக்க உணர்வு நாடு தழுவிய எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளது என்றார்.

மலாய் மேலாதிக்கமும் அவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

“அமெரிக்காவில் இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. வெள்ளையர் மேலாதிக்கம் பாதிப்பை ஏற்படுத்துவதை நாம் காண்கிறோம்,” என்று அவர் அமெரிக்காவில் நடந்த ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (Black Lives Matter) எதிர்ப்புக்களைக் குறிப்பிடும் விவாதத்தில் கூறினார்.

இருப்பினும், அகமட் ஃபத்லி ஷாரி (பாஸ்-பாசிர் மாஸ்) குறுக்கிட்டு, இரண்டையும் இணைத்து குறிப்பிடுவது பொருத்தமானதல்ல என்று கூறினார்.

“மலாய் மேலாதிக்கமும் வெள்ளையர் மேலாதிக்கமும் முற்றிலும் வேறுபட்டவை. மலாய் மேலாதிக்கம் என்று அழைக்கப்படுவது அரசியலமைப்பில் மலாய்க்காரர்களின் உரிமைகளை குறிப்பிடுகிறது, வேறு ஒன்றும் இல்லை.”

மாட் சாபு, அதை “100 சதவிகிதம்” ஒப்புக் கொண்டதாகக் கூறினார். ஆனால், ‘ஊழல் நிறைந்த முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் மனந்திரும்பலாம், முஸ்லிமல்லாதவர்களால் அப்படி அதைச் செய்ய முடியாது’ போன்ற அறிக்கைகள் குறித்து அவர் எச்சரித்தார். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் அறிக்கையை அவர் குறிப்பிட்டு பேசினார்.

“இது அசாபியா (இனவெறி)” என்று அவர் கூறினார்.

இது பின்னர், நோ ஒமர் (பி.என்-தஞ்ஜோங் காராங்) உடனான சிறிய வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. அமானா தலைவர், மலாய்க்காரர்களை ஊழலுடன் ஒப்பிட முடியாது என்று நோ ஒமர் கூறினார்.

டிரம்ப்பின் அரசியல் மிகவும் ஆபத்தானது என்றும் ஷாஃபி (வாரிசன்- செம்போர்னா) எச்சரித்தார், மேலும் சில தலைவர்கள் அரசியலில் இன மற்றும் மத பிரச்சினைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.

“மலாய்க்காரர்களுக்காக போராட விரும்புகிறோம் என்றால், பாரிசான் அரசாங்கத்தின் கீழ் 60 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இருந்துள்ளோம், அப்படியிருக்க எங்கே என்ன தவறு நடந்தது?”

“சீனர்கள் பணக்காரர்களாக இருப்பதால் நாம் அவர்களைக் குறை கூறுவதா? இந்தியர்கள் வழக்கறிஞர்களாக இருப்பதால் நாம் அவர்களைக் குறை கூறுவதா?”

“நாம் தோல்வியடைவதற்கான காரணம் என்ன, வெற்றிபெற சரியான முயற்சி என்ன என்று நாம் நம்மைப் பற்றி ஆராய வேண்டும் ” என்று அவர் கூறினார்.

இருப்பினும், ஷாஹிதன் காசிம் (பி.என்-அராவ்), மலாய் உரிமைகளை நிலைநாட்டுவது பிற இனங்களின் உரிமையை பறிப்பது அல்ல என்று கூறினார்.

“நாங்கள் மற்ற இனங்களின் உரிமைகளை மறுக்கவில்லை, எங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், எனவே இதில் இனவெறி பிரச்சினை எதுவும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.