பி.எஸ்.எம். : ‘ஒன்றுகூடும் உரிமை’ – இரட்டைதரம் பொருத்தமற்றது!

இன்று காலை, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் ஆதரவாளர்கள் 3000-க்கும் மேற்பட்டோர், கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் கூடியிருந்தது தங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் தெரிவித்தார்.

“கேள்வி என்னவென்றால், அரச மலேசியக் காவல்துறை, அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012-ன் கீழ், அப்பேரணிக்கு ஒப்புதல் அளித்ததா, குறிப்பாக, கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள, மறுசீரமைப்பு இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையில் நாம் இருக்கும்போது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று பிற்பகல் 1 மணிவரை, நஜிப்பின் ஆதரவாளர்களைக் கலைந்துபோகுமாறு காவல்துறை எச்சரிக்கை மட்டுமே கொடுத்து வந்தது. ஆனால், இதற்கு முன்னர் சில சமூக ஆர்வலர்கள் மீது ‘அனுமதியின்றி ஒன்றுகூடினர்’ என்று வழக்குத் தொடுப்பதில் காவல்துறை மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டது என, அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“காவல்துறையிடம் இந்த இரட்டைத்தரப் போக்கு எதனால்?”

சமீபத்தில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) படி, மறியலில் ஈடுபட்ட சில தொழிற்சங்க உறுப்பினர்கள், கைது செய்யப்பட்டு, ஜூன் 2-ம் தேதி, ஈப்போவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

“இன்று காலை, ஜாலான் டூத்தாவில், கூடிய 3000-க்கும் மேற்பட்டோருடன் ஒப்பிடும்போது, இந்த 15 ஊழியர்கள் ஒன்றும் பெரிய நெரிசலை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள்,” என அவர் கூறியுள்ளார்.

“பேரணியை நடத்த வேண்டுமானால், அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012-ன் படி, அனுமதி பெற வேண்டுமென இதற்கு முன்னர் காவல்துறை கூறிவந்தது, அப்படி செய்யத் தவறியவர்களைத் தடுத்து வைத்து வழக்குத் தொடுப்பதில் காவல்துறை மிகவும் திறமையானது, ஆக, இன்றைய இந்தப் பேரணிக்கு நஜிப்பின் தரப்பு முன்னதாகவே அறிவிப்பு செய்திருந்தனரா?” என்று அவர் கேட்டார்.

அப்படி முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது என்றால், தற்போதைய சூழலில், காவல்துறை எவ்வாறு அப்பேரணிக்கு அனுமதி வழங்க முடியும் என்று கேட்ட அவர், “இன்று காலை, ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில், சுகாதார அமைச்சு வலியுறுத்தி வரும் கூடல் இடைவெளி, உடல் வெப்பநிலையைப் பதிவு செய்தல் போன்ற வரையரைகள் கடைபிடிக்கப்படவில்லை,” என்றார்.

“காவல்துறையினரின் இந்த ‘இரட்டை தரநிலை’ அணுகுமுறை, துரதிர்ஷ்டவசமாக சட்டத்தை அமல்படுத்துவதில் அவர்களின் தொழில்சார்ந்த நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை.”

“அமைதியாக ஒன்றுகூடும் உரிமையை நாம் அனைவரும் மதிக்க வேண்டும், அதேசமயம் காவல்துறையும் அதனை நியாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று சிவராஜன் கேட்டுக்கொண்டார்.