எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான நிதியில் RM42 மில்லியனை தவறாகப் பயன்படுத்திய வழக்கில் ஏழு குற்றங்களில் தண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட கூடுதல் RM1 மில்லியனை ஜாமீனாக செலுத்தியுள்ளார்.
நஜீப் 67, நீல நிற சட்டை அணிந்து, மதியம் 1.00 மணியளவில் தனது மகன் நோராஷ்மானுடன் நீதிமன்றத்திற்கு வந்தார்.
பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜீப் பின்னர் உயர்நீதிமன்ற குற்றவியல் பதிவு கவுண்டரில் இருந்து வெளியேறி மதியம் 1.30 மணிக்கு நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்.
அவரது புகைப்படத்தை எடுத்தபோது, ‘நேற்றே நிறைய படங்கள் எடுத்தாகிவிட்டது’ என்று நஜிப் கேலியாகக் கூறினார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அனைத்து தண்டனைகளையும் இடைநிறுத்த தற்காப்பு தரப்பின் விண்ணப்பத்தை நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து, நேற்று நஜிப் கூடுதல் RM1 மில்லியன் ஜாமீன் வழங்க உத்தரவிடப்பட்டது.
நம்பிக்கை மோசடி (சிபிடி), பணமோசடி, அதிகார முறைகேடு, மற்றும் RM42 மில்லியன் எஸ்ஆர்சி நிதிகள் சம்பந்தப்பட்ட நிதி முறைகேடு போன்ற ஏழு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
கூடுதல் நிபந்தனையாக, குற்றம் சாட்டப்பட்டவர் மாதத்திற்கு இரண்டு முறை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்துசெல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.