நேற்று நீதிமன்றத்தில் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்ட பாரிசான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடல் இடைவெளிக்கான எஸ்ஓபி-க்களை மீறியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றாம் சாட்டியுள்ளனர்.
நேற்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை தனிமைப்படுத்த வேண்டுமா என்று ஆர்.எஸ்.என் ராயர் (பி.எச்-ஜெலுதோங்) கேட்டார்.
அகமட் மஸ்லான் (பி.என்-பொந்தியான்), அஜீஸ் அப்துல் ரஹீம் (பி.என்-பாலிங்) மற்றும் நோ ஒமர் (பி.என்-தன்ஜோங் காராங்) ஆகியோரை ராயர் பெயரிட்டார்.
“அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா என நான் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் நாம் எல்லோரும் இப்போது கோவிட்-19-ஆல் பாதிக்கப்படக்கூடியவர்கள். மக்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். எஸ்ஓபி-க்கள் சாதாரண மக்களுக்கு மட்டும் தானா என்று அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.”
இருப்பினும், சபாநாயகர் அசார் ஹருன், அறிகுறிகள் இல்லாத வரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்க முடியாது என்றார். மக்கள் பிரதிநிதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூடல் இடைவெளி எஸ்ஓபி-க்களுக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பின்னர், அகமட் எழுந்து நின்று, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் (பேபாஸ்-லங்காவி), முக்ரிஸ் மகாதீர் (பேபாஸ்-ஜெர்லூன்), அமிருதீன் ஹம்சா (பேபாஸ்-குபாங் பாசு) மற்றும் மஹ்பூஸ் ஓமர் (பி.எச்-போக்கோக் சேனா) ஆகியோரும் கூடல் இடைவெளி இல்லாத பேரணியில் கலந்து கொண்டனர் என்று கூறினார்.
ஜூலை 18 அன்று அலோர் செட்டாரில் நடந்த “பெர்சாட்டு பிளாக்அவுட்” கூட்டத்தை அகமட் குறிப்பிட்டார்.
“நான் தனிமைப்பட வேண்டுமானால் அவர்களும் தனிமைப்பட வேண்டாமா?” என்று அகமட் கேட்டார்.
மலேசியா நேற்று 39 புதிய பாதிப்புகளை பதிவு செய்தது. ஜூன் 15க்குப் பிறகு இதுவே அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் ஆகும்.