கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஆறு மாத கால வங்கிக் கடன் தள்ளுபடி செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடையும் நிலையில், அதை நீட்டிப்பதற்கும் தேவைப்படுவோருக்கு வங்கி உதவியை வழங்கவும் பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார்.
“செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் ஆறு மாத கால வங்கிக் கடன் தள்ளுபடி காலம் முடிவடையும் நிலையில் சகோதர சகோதரிகள் எதிர்நோக்கும் பிரச்சனையை நான் அறிவேன். இந்த தள்ளுபடி நீக்கப்பட வேண்டும் என்று பலரும் எதிர்ப்பார்க்கின்றனர்.”
“எனவே, ஆறு மாத கால வங்கிக் கடன் தள்ளுபடி காலம் முடிந்த பிறகும் உதவி தேவைப்படும் சில சகோதர சகோதரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிதி அமைச்சர் மற்றும் பேங்க் நெகாரா ஆளுநருடன் கலந்துரையாடினேன்”.
“எனவே, தேசிய கூட்டணி அரசு இந்த ஆறு மாத கால வங்கிக் கடன் தள்ளுபடியை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது என்பதை அறிவிக்க விரும்புகிறேன். இது குறிப்பாக தேவைப்படுபவர்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறது.”
“இந்த அறிவிப்பின் மூலம், மலேசியர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்று நம்புகிறேன், அதே நேரத்தில் அரசாங்கமும் தொழில்துறையும் நம் நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க பாடுபடுகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் ஒரு நேரடி ஒளிபரப்பில் தெரிவித்தார்.
அக்டோபரில் தொடங்கி, கடன் வாங்கியவர்கள் வங்கி கடனை மீண்டும் செலுத்த தொடங்க வேண்டும். ஆனால் பல பிரிவினர்களுக்கு குறிப்பிட்ட சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன:
- இந்த ஆண்டு வேலை இழந்தவர்களுக்கு மற்றும் இன்னும் புதிய வேலைவாய்ப்பைப் பெறாதவர்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு வங்கிக் கடன் தள்ளுபடி
சம்பளம் குறைக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர கட்டணத்தில் குறைவு
இதர வகையான உதவிகளுக்கு கடன் வாங்கியவர்கள், வங்கியுடன் கலந்தாலோசிக்கலாம்
“கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர சகோதரிகளின் சுமையை குறைக்க இது உதவும் என்று நம்புகிறேன்” என்றார் முகிதீன்.