நேரலை: சபா மாநில அரசியல் நிலவரம்

சபாவின் அரசியல் நிலவரம் குறித்த நேரடி அறிக்கையை மலேசியாகினி உங்களுக்குக் கொண்டு வருகிறது.

மூசா தன்னிடம் எண்கள் இருப்பதைக் காட்டுகிறார்

மாலை 6.10 மணி
– மாநில அரசை அமைப்பதற்குத் தேவையான எண்கள் தன்னிடம் உள்ளன என்பதற்கு ஆதாரமாக முகநூலில் ஒரு புகைப்படத்தை மூசா வெளியிட்டுள்ளார்.

புகைப்படம் மூசா மற்றும் பல்வேறு சபா சட்டமன்ற உறுப்பினர்கள் 1 முதல் 33 வரையிலான எண் பலகைகளை வைத்திருப்பதைக் காட்டுகிறது.

மாநில அரசை அமைப்பதற்கான தனது முயற்சியைக் கருத்தில் கொள்ள ஆளுநருக்கு அரசியலமைப்பு கடமை இருப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.

“ஆனால் மாநில சட்டசபை கலைக்கப்பட்டது உண்மை என்றால், சபா மக்களுக்கு ஒரு நிலையான மற்றும் அனைவரின் நலனுக்காக போராடும் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக வரும் தேர்தலில் நாங்கள் போராடுவோம் என்று நான் கூற விரும்புகிறேன்.” என்று அவர் கூறுகிறார்.

சபா சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

மாலை 5.50 மணி
– சபா மாநில சட்டசபை கலைக்கப்பட்டதை ஆளுநர் ஜூஹர் மஹிருதீன் அதிகாரப்பூர்வமாக்கியுள்ளார். அது வர்த்தமானியும் செய்யப்பட்டுள்ளது.

சபா மாநில அரண்மனைக்குள் நுழைய மூசாவிற்கு தடை

மாலை 4.45 மணி – முன்னாள் சபா முதல்வர் மூசா அமான் மற்றும் அவரது குழுவினர் சபா மாநில அரண்மனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

அக்குழுவை சார்ந்த பத்து சொகுசு வாகனங்கள் இன்று பிற்பகல் 3.50 மணிக்கு ஜாலான் இஸ்தானாவின் அருகே காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.

மூசாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படும் பல வழக்கறிஞர்கள் சாலை தடையை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாக கூறப்படுகிறது, ஆனாலும் அவர்களால் காவல் தடைகளை கடக்க முடியவில்லை.

இன்று முன்னதாக லுயாங்கில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது மூசா, அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு பெரும்பான்மை இருப்பதாக அறிவித்து, சட்டமன்றம் கலைக்கப்படுவதாக சபா முதல்வர் ஷாஃபி அப்தாலின் அறிவிப்பு பொருத்தமற்றது என்று கூறினார்.

இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவாவை நீக்கியது பி.கே.ஆர்

மாலை 4.20 மணி – இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவா டெக் ஹோவை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கியதாக பி.கே.ஆர் தெரிவித்துள்ளது.

“சபாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையை பி.கே.அர். ஒழுங்கு வாரியம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. சபா மாநில அரசாங்கத்தை வீழ்த்த திட்டமிட்டுள்ள மூசா அமான் குழுவுடன் இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவா டெக் ஹோ இருப்பதை நேற்று ஊடகங்கள் புகைப்படம் எடுத்தன.”

“சபா மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முற்படும் முகாமில் அவர் இருப்பதைப் பற்றி சபா மாநில தலைமைக் குழுவிலிருந்தும் உறுதிப்படுத்தல் கிடைத்தது. மக்கள் ஆணைக்கு துரோகம் இழைக்க அனுமதிக்கக் கூடாது என்ற பி.கே.ஆரின் நிலைப்பாட்டை கருத்தில் எடுத்துக் கொண்டு, கென்னி சுவா டெக் ஹோ பி.கே.ஆரிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டதாக ஒழுங்கு வாரியம் அறிவிக்கின்றது” என்று அவர் கூறினார்.

ஒரு முதல்வர் மாநில சட்டசபையின் நம்பிக்கையை இழக்கும்போது, சட்டமன்றத்தை கலைக்க சபா ஆளுநர் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்று சபா மாநில அரசியலமைப்பின் பிரிவு 7 கூறுகிறது.

முன்னதாக மூசாவின் போட்டியாளராக இருந்த இடைக்கால முதல்வர் ஷாஃபி அப்தால், சபா ஆளுநர் ஜூஹர் மஹிருதீன் மாநில சட்டசபையை கலைத்து, மக்களுக்கு ஆணையை திருப்பித் தர ஒப்புக் கொண்டதாக அறிவித்தார்.

பிற்பகல் 3.25: சபாவின் அரசியல் நெருக்கடி உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்.

“சபாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும். சபா முதல்வர் ஷாஃபி அப்தால், மாநில ஆளுநருக்கு வழங்கிய ஆலோசனையை தொடர்ந்து, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் மறுக்கப்பட்டுள்ளன.”

“ஒரு புதிய ஆணை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சபாவில் நடப்பது மற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று நம்புகிறேன். மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.” என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பிற்பகல் 3.00 : முன்னாள் சபா முதல்வர் மூசா அமான், ஷாஃபி அப்தாலுக்கு பதிலாக மாநிலத்தின் புதிய முதல்வராக தானே தகுதியுடையவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மூசாவிற்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில ஆளுநருக்கு உள்ளது என்றார்.

“சபா முதல்வராக நியமிக்கப்படுவதற்கு நான் தகுதியானவன், ஏனெனில் எனக்கு பெரும்பான்மையினரின் ஆதரவு உள்ளது.”

பிற்பகல் 2.50 – மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என்று விரும்பும் ஷாஃபி அப்டாலை சாடியுள்ளார் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்.

“நீங்கள் சபாவைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. பாக்காத்தான் பிளஸின் பிரதமராகும் உங்கள் போராட்டத்தில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்.”

“கடந்த மாதம், கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க வேண்டிய அவசியம் காரணமாக சபா சட்டமன்றத்தை கலைக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார். ஆனால் இன்று, அவர் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார்.” என்றார் நஜீப்

ஒரு முறை அவர்கள் பறித்த மக்கள் ஆணை இப்போது அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிற்பகல் 2.40 – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது

சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்து சபா சட்டமன்ற சபாநாயகர் சையத் அபாஸ் சையத் அலியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது.

“சபா சட்டமன்ற சபாநாயகர் முதலில் ஒரு அறிவிப்பை (தேர்தல் ஆணையத்திற்கு) வழங்க வேண்டும். அறிவிப்பு வந்தபின், தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிடும்” என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சபா முதல்வர் ஷாஃபி அப்தால் இன்று கோத்தா கினாபாலுவில் செய்தியாளர் சந்திப்பில் மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.

அதற்கு சபா ஆளுநர் ஜூஹர் மஹிருதீனின் ஒப்புதல் அளித்துள்ளதாக ஷாஃபி கூறினார்.

பிற்பகல் 2.15 – பி.எஸ்.எம் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் கட்சி தாவும் நடவடிக்கை சட்ட ரீதியாக தவறில்லை எனும் வரை தேர்தல் வெறும் ‘சடங்கு’ மட்டுமே என்று கருதுவதாகக் கூறினார்.

“சபாவில், கட்சி தாவல் ஒரு பிரச்சினையாக உள்ளது. மலேசியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, சபா மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகளான USNO, Berjaya, PBS, BN மற்றும் Warisan ஆகியவற்றை நீங்கள் கருத்தில் எடுத்துக் கொண்டால், சபாவில் ஒரு புதிய ஜனநாயகம் தோன்றியுள்ளது.”

“ஆனால் 1994 ஆண்டில், பாரிசான் 23 இடங்களையும், பிபிஎஸ் 25 இடங்களுடன் எளிய பெரும்பான்மையில் வென்றது. கட்சி தாவும் நடவடிக்கையால் இரண்டு வாரங்கள் கழித்து பிபிஎஸ் அதிகாரத்தை இழந்ததை எப்படி மறக்க முடியும்.”

2018 இல் 14வது பொதுத் தேர்தல் முடிந்தவுடன், மூசாவும் ஷாஃபியும் ஒருவரையொருவர் “பின் கதவு அரசாங்கங்கள்” என்று அழைத்துக்கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

“உண்மை என்னவென்றால், இறுதியில் பண அரசியலே சபாவை யார் நிர்வகிக்கிறது என்பதை தீர்மானிக்கிறது, மக்களின் ஆணை அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

மதியம் 12.05 சட்டமன்றம் கலைக்கப்படும்! மாநில தேர்தல் நடத்தப்படும்!

சபா மாநிலத் தேர்தலை நடத்த ஏதுவாக மாநில சட்டமன்றத்தை கலைக்க மாநில ஆளுநர் (யாங் டி-பெர்துவா நெகேரி) ஜூஹர் மஹிருதீன் ஒப்புதல் அளித்துள்ளதாக சபா முதல்வர் ஷாஃபி அப்டால் அறிவித்தார்.

இன்று காலை நடந்த கூட்டத்தில் ஜுஹார் தனது சம்மதத்தை தெரிவித்ததாக ஷாஃபி கூறினார்.

“நேற்று மாநில சட்டமன்றத்தை கலைக்கக் கோரி விண்ணப்ப கடிதத்தை சமர்ப்பிக்க நான் மாநில ஆளுநரை சந்தித்தேன். இன்று காலை, அவர் சபையை கலைக்க ஒப்புக்கொண்டார்,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார், அதில் அவருக்கு ஆதரவளிக்கும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

“அவர்கள் அரண்மனைக்குச் செல்வதும், பதவியேற்க இங்கேயும் அங்கேயும் அலைவதும் ஒருபுறமிருக்க, சட்டமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

காலை 11.00 – மூசா அமான் மதியம் 12 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்

முன்னாள் சபா முதல்வர் மூசா அமான் மதியம் 12 மணிக்கு கோத்தா கினாபாலுவில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார்.

காலை 10.53: பதவியேற்பு அறிகுறி இதுவரை இல்லை

10.30 நிலவரப்படி, புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவின் அறிகுறியே இல்லை.

முன்னாள் சபா முதல்வர் மூசா அமான் எளிய பெரும்பான்மை இருப்பதாகக் கூறி, இன்று முதல்வராக பதவியேற்பார் என்று நம்பப்படுகிறது.

பதவியேற்பு விழா குறித்து சபா அரண்மனையிலிருந்து இதுவரை எந்த அறிகுறியும் இல்லை என்று கோத்தா கினபாலுவில் இருந்து ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், முதலமைச்சர் ஷாஃபி அப்தால், வாரிசான் பிரதிநிதிகள் மற்றும் அவரது கூட்டணி உறுப்பினர்களுடன் ஒரு தனிப்பட்ட கூட்டத்தை நடத்தி வருகிறார்.

காலை 10.40 – ஷாஃபி வாரிசான் சட்டமன்ற உறுப்பினரை சந்திக்கத் தொடங்குகிறார்.

சபா முதலமைச்சர் ஷாஃபி அப்தால் சபா மாநில நிர்வாக மையத்தில் ஒரு மண்டபத்திற்குள் நுழைந்தார். அங்கு ஊடகக்காரர்களும் அவரது தலைமையை ஆதரிக்கும் பிரதிநிதிகளும் அவருக்காக காத்திருந்தனர்.

சட்டமன்ற உறுப்பினருடன் முதலில் தனிப்பட்ட சந்திப்பை நடத்த ஷாஃபி விரும்பியதால் ஊடக உறுப்பினர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு ஷாஃபி காலை 11 மணி அளவில் தனது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார் என்று ஒரு உதவியாளர் கூறினார்.

மாநில அரசைக் கைப்பற்ற பெரும்பான்மையைப் பெற்றதாகக் கூறியுள்ள முன்னாள் முதல்வர் மூசா அமானின் அறிவிப்பு குறித்து அவர் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தியப்பிரமாணம் எடுக்க மூசா அமான் மாநில அரண்மனைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காலை 10.05: எதிர்க்கட்சி யாங் டி-பெர்துவா நெகேரி ஜுஹர் மஹிருதீனை சந்திப்பதை சபா பெர்சத்து தலைவர், ஹாஜிஜி முகமட் நூர் உறுதிப்படுத்தினார்.

மூசா மாநில முதல்வராக பதவியேற்பாரா என்று கேட்டதற்கு, அவர், “கடவுள் விரும்பினால், எல்லாம் சரியாக நடந்தால்…” என்று கூறினார்.

வாரிசான் தலைமையிலான மாநில அரசைக் கைப்பற்ற 65 சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 34 பேரின் ஆதரவையும் எதிர்க்கட்சி கொண்டுள்ளது என்றும் ஹாஜிஜி கூறினார்.

காலை 10 மணி – ஷாஃபியின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது

காலை 9.40 – மூசா அமான் காலை 10 மணிக்கு அரண்மனைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 9.20 – ஷாஃபி யாங் டி-பெர்துவா நெகேரி சந்திக்கிறார்

சபா முதலமைச்சர் ஷாஃபி அப்தால் இன்று காலை மீண்டும் யாங் டி-பெர்டதுவா நெகேரி, ஜூஹர் மஹிருதீனை சந்தித்தார். 24 மணி நேரத்தில் இது இரண்டாவது முறை சந்திப்பாகும்.

சபாவின் அரசியல் நிலைமை குறித்து ஷாஃபி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே இந்த வளர்ச்சி ஏற்பட்டது.

நேற்றைய கூட்டத்தில், ஷாஃபி மாநிலத் தேர்தலின் சாத்தியம் குறித்து விவாதித்ததாக நம்பப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் மூசா அமான் மாநில அரசைக் கைப்பற்றுவதற்காக மாநில பிரதிநிதிகளிடமிருந்து பெரும்பான்மையைப் பெற்றதாகக் கூறியுள்ளார்.

தனக்கு ஆதரவளித்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து சட்டப்பூர்வ அறிக்கையை (எஸ்டி) பெற்றுள்ளதாக மூசா கூறினார்.

இருப்பினும், அந்த அம்னோ தலைவர் எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை.

எஸ்டியை ஒப்படைக்க யாங் டி-பெர்துவா நெகேரி உத்தரவிட்டதாகவும் மூசா கூறினார்.

கடந்த மாதம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பில், அட்டர்னி ஜெனரல் இட்ருஸ் ஹருன் மூசாவுக்கு எதிரான 46 ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தார்.