13 முன்னாள் தேர்தல் வேட்பாளர்கள் பெர்சத்து கட்சியை விட்டு விலகினர்

14வது பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி சின்னத்தில் போட்டியிட்ட 13 முன்னாள் வேட்பாளர்கள் (ஒன்பது நாடாளுமன்றம் மற்றும் நான்கு மாநில சட்டமன்ற தொகுதிகள்) இன்று பதவி விலகுவதாக அறிவித்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களில், டத்தோ டாக்டர் முகமட் பெளட்ஸி மூசா (செத்தியு நாடாளுமன்றத்தில் போட்டியிட்டார்); அஸ்ரான் டெராமன் (ஜெலி, கிளந்தான்); வான் நாசரி வான் ஜூசோ (பெசுட், திரெங்கானு); பேராசிரியர் டாக்டர் சாலிஹுதீன் ராடின் சுமடி (பாசிர் சாலாக், பேராக்); முகமட் ரபீடி ஹாசிம் (கோலா க்ராவ், பகாங்) அடங்குவர்.

மேலும், நோர்லிசா நகாடிமன் (பெங்கெராங், ஜோகூர்); டத்தோ கைரில் அனுவார் அகிருதீன் (லாருட், பேராக்); முகமட் நோர் ஹுசின் (குவா முசாங், கிளந்தான்); மற்றும் அமிருல் பைருஸ்ஸீன் ஜமாலுதீன் (லெங்கோங், பேராக்).

முன்னாள் சட்டமன்ற வேட்பாளர்கள் டாக்டர் சே கு ஹாஷிம் சே கு மாட் (கோலா பெசுட், திரெங்கானு); கேப்டன் வான் மர்சுடி வான் ஓமார் (செமெராக், கிளந்தான்); டாக்டர் வான் சுல்கைரி வான் எம்.டி ஜைன் (தெண்டோங், கிளந்தான்); மற்றும் அபிஃப் சயிரோல் அப்துல் ரஹீம் (பெபார், பகாங்) ஆகியோரும் இதில் அடங்குவர்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் அக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முகமட் பெளட்ஸி, அவர்கள் தற்காலிகமாக எந்தக் கட்சியிலும் இணையாமல் ஒரு ‘பார்வையாளர் குழுவாக’ செயல்படுவார்கள் என்றும் கூறினார்.

“அடிமட்ட உறுப்பினர்களின் குரலின் கருத்தை கருத்தில் எடுத்துக் கொண்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது, இம்முடிவு எந்தவொரு தரப்பினரின் வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் புதிய கட்சியில் அவர்கள் சேர்வார்களா என்று கேட்டதற்கு, அது இன்னும் முறையாக அமைக்கப்படாததால் இந்த விவகாரம் இன்னும் விவாதத்தில் உள்ளது என்றார்.