தேர்தல் சீர்திருத்த அமைப்பான குளோபல் பெர்சே (Global Bersih), அடுத்த சபா மாநிலத் தேர்தலில் வெளிநாட்டில் இருக்கும் வாக்காளர்களுக்கு போதுமான பிரச்சார காலத்தையும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது
“குளோபல் பெர்சே இயக்கம் போதுமான பிரச்சார காலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்புகிறது. குறிப்பாக, வெளிநாட்டு வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளைப் பெறவும் திருப்பித் தரவும் குறைந்தபட்சம் 21 முதல் 24 நாட்கள் வரையிலான பிரச்சார காலத்தை பரிந்துரைக்கிறது”.
“14வது பொதுத் தேர்தலின் போது எதிர்கொண்ட பிரச்சினைகள் மீண்டும் வராமல் தடுப்பதற்காக இது உதவும்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரச்சார காலம் மிகக் குறுகியதாக இருந்ததால், வாக்காளர்கள் வாக்குச் சீட்டுகளைப் பெற்று, அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குத் திருப்பித் தர போதுமான நேரம் இல்லாமல் போனது என்று அந்த இயக்கம் கூறியது.
கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் முறையைப் ஒட்டுமொத்தமாக ஆராய வேண்டும் என்றும் குளோபல் பெர்சே கூறியது.
“வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள அனைத்து மலேசியர்களும் அரசியலமைப்பு முறைபடி தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முக்கிய பொறுப்பு உள்ளது.”
“எனவே, தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்படும் பிரச்சார காலம் மற்றும் வாக்களிப்பு செயல்முறைகள், வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் வாக்களிக்கும் செயல்முறையை எளிதாக்குவதாகவும் அமைய வேண்டும்.”
“எனவே, குறைந்தபட்சம் 21 முதல் 24 நாட்கள் வரை பிரச்சாரம் உட்பட, அனைத்து வெளிநாட்டு வாக்காளர்களுக்கும் சாத்தியமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான முறையை அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்,” என்றது குளோபல் பெர்சே இயக்கம்.