ஸ்லிம் இடைத்தேர்தலில் அம்னோவைச் சேர்ந்த பாரிசன் நேஷனல் வேட்பாளர் முகமட் ஜைடி அஜீஸ், சுயேட்சை வேட்பாளர் அமீர் குசாய்ரி முகமது தனுசியை எதிர்கொள்வார். அமீர் குசாய்ரி முகமது தனுசி, டாக்டர் மகாதிர் முகமதுவின் பெஜுவாங் தானா ஆயேர் கட்சியால் ஆதரிக்கப்படுவார்.
மற்றொரு சுயேட்சை வேட்பாளரும் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ததால், இது மும்முனைப் போட்டியாக மாறியது.
மூன்று வேட்பாளர்களின் சுருக்கமான பின்னணி இங்கே.
- முகமட் ஜைடி அஜீஸ் (அம்னோ-பி.என்)
43 வயதான முகமட் ஜைடி, ஸ்லிம் மக்களுக்கு புதியவரல்ல. தற்போது தஞ்ஜோங் மாலிம் அம்னோ பிரிவின் செயல் தலைவராக உள்ளார். 2000 முதல் 2018 வரை ஸ்லிம் கிராமப் பிரிவு அம்னோ இளைஞர் தலைவராக இருந்த அவர், ஸ்லிம் பிரிவு அம்னோ இளைஞர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
முகமட் ஜைடி மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான இவர், மலேசிய இளைஞர் பேரவையின் துணைத் தலைவர் மற்றும் ஆசிய இளைஞர் ஒத்துழைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் உட்பட குறைந்தது 12 சங்கங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களின் நலன்களுக்காக போராடுவதாகவும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முடிந்தவரை சிறந்த முறையில் தீர்ப்பதாகவும் உறுதியளிக்கிறார்.
- அமீர் குசாய்ரி முகமட் தனுசி (சுயேட்சை)
அமீர் குசாய்ரி ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார். ஆனால் சமீபத்தில் பெஜுவாங் தானா ஆயேர் (பெஜுவாங்) கட்சியைத் தொடங்கிய முன்னாள் பிரதமர் மகாதீர், அமீர் தான் உருவாக்கும் அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறினார்.
இருப்பினும், பெஜுவாங் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என்பதால், அமீர் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார்.
அமீரின் வேட்புமனுவை ஆதரித்து பி.கே.ஆர், டி.ஏ.பி மற்றும் அமானா ஆகிய பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு அவர்கள் அமீரை ஆதரிப்பதாக விளக்கமளித்துள்ளனர்.
38 வயதாகும் அமீர் ஒரு ஷரியா வழக்கறிஞராக உள்ளார், அவர் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஷரியா சட்டத்தில் பட்டம் பெற்றவர்.
பேராக் நகரைச் சேர்ந்த அமீர், அரபு உட்பட மூன்று மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
அவரது பெற்றோர்களான ஜரியா முகமட் யூனுஸ் மற்றும் மறைந்த முகமட் தனுசி மெளலத் ஆகியோர் இதற்கு முன்பு மத ஆசிரியர்களாக இருந்தனர்.
அமீரின் மனைவி டாக்டர் நூர் அய்னா ஓத்மான், தெலுக் இந்தான் மருத்துவமனையில் கதிரியக்க நிபுணராக உள்ளார்.
தனது நியமனத்தைத் தொடர்ந்து, தவறு என்ன என்பதை ஆராய்ந்து அதை திருத்துவதற்கான முதல் படியாக ஸ்லிம் இடைத்தேர்தல் இருக்கும் என்று தான் நம்புவதாக அமீர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அமீர் ‘மரம்’ சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிடுவார்.
- சந்திரசேகரன் சுப்பிரமணியம் (சுயேட்சை)
சநதிரசேகரன், பண்டார் பேராங் இடைநிலைப் பள்ளியின் முன்னாள் பள்ளி ஆசிரியர்.
ஸ்லிம் இடைத்தேர்தலில் போட்டியிட அவர் நேற்று தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.
தன்னை ஒரு சுற்றுச்சூழல் ஆதரவாளர் என்றும் மலேசிய இயற்கை பாதுகாப்பு அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்றும் சந்திரசேகரன் விவரித்தார்.
45 வயதான இவர் அரசியலில் ஈடுபடுவதே தனது உண்மையான லட்சியம் என்று கூறினார்.
அவரது தந்தை ம.இ.கா-வின் அரசியல்வாதி என்றும், அவரது தாயார் சுல்தானா பேரக்கின் துணைப் பணியாளர் என்றும் அவர் கூறினார்.
அவர் ‘புத்தகம்’ சின்னத்தைப் பயன்படுத்தி ஸ்லிம் இடைத்தேர்தலில் போட்டியிடுவார்.
ஆகஸ்ட் 25 அன்று இத்தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு நாடைபெறும் வேளையில் ஸ்லிம் இடைத்தேர்தல் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஸ்லிமில் 23,094 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 75 சதவீதம் மலாய்க்காரர்கள், அடுத்து இந்தியர்கள் (13 சதவீதம்), சீனர் (10 சதவீதம்), மற்றவர்கள் (2 சதவீதம்) உள்ளனர்.
கடந்த நான்கு தவணைகளில் ஸ்லிம் அம்னோவின் கோட்டையாக இருப்பதால் அம்னோவுக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அம்னோ / பி.என் மற்றும் பாஸ் ஆகியவற்றின் 65 சதவீத வாக்குகள் ஜைடிக்கு வசதியான வெற்றியைத் தரும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.