கெடாவில் மற்றொரு புதிய கோவிட்-19 திரளை

சாலா திரளை (Sala cluster) என்று அழைக்கப்படும் மற்றொரு புதிய திரளை, கெடா மாநிலத்தின் யான் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெடாவின் சுல்தானா பஹியா மருத்துவமனையில் கடுமையான சுவாச நோய்த்தொற்றின் (SARI) மருத்துவ கண்காணிப்பு முறை மூலம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று ஒரு மலேசிய நபர் (பாதிப்பு எண் 9148) நேர்மறையாக கண்டறியப்பட்டதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14 ஆம் தேதி கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் நெருங்கிய தொடர்புத் தேடல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சில பாதிப்புகள் சாதகமாகக் கண்டறியப்பட்டன.”

“இன்று பதிவாகியுள்ள மூன்று பாதிப்புகளும் பாதிப்பு எண் 9148-ன் குடும்ப உறுப்பினர்கள்” என்று அவர் இன்று கோவிட்-19 இன் வளர்ச்சி குறித்த செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

இன்று வரை, திரளையின் முதல் பாதிப்பில் இருந்து 79 நெருங்கிய தொடர்புகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கையில் மூன்று பாதிப்புகள் நேர்மறையாகவும், 76 நபர்கள் இன்னும் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

திரளையின் அனைத்து பாதிப்புகளும் மலேசியர்கள் சம்பந்தப்பட்டவை என்றும், நோய்த்தொற்றுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

“பாதிப்பு கண்காணிப்பு நடந்து வருகிறது மற்றும் அடையாளம் காணப்பட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள், சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செயல்முறைகள் போன்ற தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றும் அவர் கூறினார்.