கோவிட்-19: இன்று 26 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 23 உள்ளூர் பாதிப்புகள் மற்றும் மீதமுள்ளவை இறக்குமதி பாதிப்புகள் ஆகும்.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நேர்மறையான பாதிப்புகளின் எண்ணிக்கை 9,175 என்றும், 219 பாதிப்புகள் தொற்றுநோயுடன் சிகிச்சையில் உள்ளன என்றும் கூறினார்.
23 உள்ளூர் தொற்றுநோயில், 20 பாதிப்புகள் மலேசியர்களுடன் தொடர்புடையவை. மற்ற மூன்று பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்கள் என்று அவர் விளக்கினார்.
“மலேசியர்களிடையே உள்நாட்டு பரவல், கெடாவில் சாலா எனும் புதிய திரளையில் மூன்று பாதிப்புகள், தாவார் திரளையில் 10 பாதிப்புகள் மற்றும் மூடா திரளையில் ஒரு பாதிப்பு ஆகும்.”
“கோலாலம்பூரில் இரண்டு பாதிப்புகள், பினாங்கில், தாவார் திரளையில் இரண்டு பாதிப்புகள், ஜொகூர் மற்றும் பெர்லிஸில் தலா ஒரு பாதிப்புகள்” என்று அவர் இன்று கோவிட்-19 வளர்ச்சி குறித்த செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்றுநோய்களின் பாதிப்புகள் நெகிரி செம்பிலானில் சட்டவிரோதமாக குடியேறிய கைதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு பாதிப்புகளும் மற்றும் கோலாலம்பூரில் ஒரு பாதிப்பும் உள்ளன.
இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்று பாதிப்புகள் ஆஸ்திரியா, அமெரிக்கா மற்றும் வியட்நாமில் இருந்து வந்தவை ஆகும். இவை அனைத்தும் கோலாலம்பூரில் கண்டறியப்பட்டன. இதில் இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு மலேசியர் அல்லாதவர்கள் அடங்குவர்.
இன்று மூன்று பாதிப்புகள் குணமடைந்து, முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், இன்றுவரை மொத்தம் 8,831 பாதிப்புகள் (மொத்த பாதிப்புகளில் 96.3 சதவீதம்) முழுமையாக மீட்கப்பட்டதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) ஆறு கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு பாதிப்புக்கு சுவாச உதவி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“கோவிட்-19 தொடர்பான இறப்பு அதிகரிப்பு இன்று பதிவாகவில்லை. மொத்த இறப்பு எண்ணிக்கை 125 ஆக உள்ளது (மொத்த பாதிப்புகளில் 1.36 சதவீதம்),” என்று அவர் கூறினார்.