PRK SLIM | பாரிசான் வேட்பாளர் முகமட் ஜைடி அஜீஸை வெற்றி பெற செய்து தனக்கு அனுதாபம் காட்டுமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டார் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று.
ஃபெல்டா குனுங் பெசுட்டில் இன்று கூட்டணியின் தொடக்க உரையில் கிட்டத்தட்ட 500 வாக்காளர்கள் மற்றும் பாரிசான் ஆதரவாளர்கள் முன் பேசிய நஜிப், இந்த முறை இடைத்தேர்தல் அடுத்த பொதுத் தேர்தலுக்கான தொடக்கம் என்றும் கூறினார்.
“பாக்காத்தான் ஆட்சி சகாப்தத்தில், நாங்கள் பல்வேறு விஷயங்களில் குற்றம் சாட்டப்பட்டோம், நான் ஒரு திருடன் என்று குற்றம் சாட்டப்பட்டேன். ஆனால், இதுவரை நீதிமன்றத்தில், RM42 மில்லியன் வழக்கு ஒன்றில் மட்டும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.”
“அதில் 99 சதவீத நிதியை அரசியல் மற்றும் தொண்டு பணிகளுக்காகவே நான் செலவழித்தேன். இது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.”
“நான் அம்னோ, பிஎன், அனாதை இல்லங்கள் மற்றும் தஃபிஸுக்காக 99 சதவீத நிதியை (ஆர்எம் 42 மில்லியனில்) செலவிட்டேன். இதற்காக எனக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது என்ன நியாயம்?” என்றார் நஜீப்.
“எனவே, தாய்மார்களே, நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு என் மீது அனுதாபம் இருந்தால், இந்த இடைத்தேர்தலில் பாரிசான் சரியான பக்கத்தில் இருப்பதைக் காட்டுங்கள், இந்த நாட்டின் நிலைமையை நாங்கள் சரிசெய்ய விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இன்றைய உரையில், தேசிய கூட்டணி மற்றும் பெர்சத்து அரசாங்கம் குறித்து பேசுவதைத் தவிர்க்க நஜிப் முயன்றார்.
மாறாக, பாரிசான் அரசாங்கத்தின் வெற்றிகளையும், அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான அரசியல் ஒத்துழைப்பான முவபாக்காட் நேஷனல் (Muafakat Nasional) இன் பலத்தை பற்றியே பேசினார்.
“நம் நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று தெரிந்தவர்களிடம் மீண்டும் திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது. பி.என் சகாப்தத்திற்கு திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது. பி.என் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதன் மூலம் நாம் இதற்கான சமிக்ஞையை அளிப்போம்.”
“பி.என் மற்றும் முவாபாக்கட் நேஷனல் இணைந்து இந்த நாட்டின் நிலைமையை சரிசெய்ய விரும்புகிறோம்.” என்று அவர் பெர்சத்து அல்லது முகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் கூறினார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது பெர்சத்து கட்சியுடனான தங்கள் ஒத்துழைப்பை அம்னோ கைவிடுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
இன்று காலை, முகிதீன், முவாபாக்கட் நேஷனலில் சேர விண்ணப்பிக்க பெர்சத்து உச்ச தலைமைக் குழு ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.
கட்சிக்கு இது சிறந்த வழி என்று தான் நம்புவதாக பெர்சத்து உறுப்பினர்களுக்கு உரையாற்றிய உரையில் முகிதீன் கூறினார்.
இன்று பிற்பகல், அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளர் வெல்வதற்கான வாக்குகளை கொண்டு வரும் திறனை நிரூபிக்க பெர்சத்து இளைஞர் பிரிவிற்கு (அர்மடா) சவால் விடுத்தார்.
இந்த முறை பாரிசானுக்கு 6,000 வாக்குகளை ஈர்க்க தவறினால், பெர்சத்து உடனான ஒத்துழைப்பு குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.