2017 ஆம் ஆண்டில் தஹ்பிஸ் டாருல் குர்ஆன் இட்டிபாக்கியா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 நபர்களைக் கொன்ற குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், 19 வயது இளைஞன், மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கும் வரையில் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
23 நபர்களை வேண்டுமென்றே கொலை செய்த 23 குற்றச்சாட்டுகளில் நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறியதை அடுத்து, இப்போது 19 வயதாகும் அந்த இளைஞருக்கு இத்தண்டனையை விதித்தார் நீதிபதி அஸ்மான் அப்துல்லா.
சம்பவம் நடந்தபோது அந்த இளைஞனுக்கு 16 வயது.
“அனைத்து தரப்பினரின் சாட்சியங்களையும் கேட்டபின், சம்பந்தப்பட்ட நபர் வேண்டுமென்றே கொலை செய்யும் நோக்கத்துடன் அக்குற்றத்தை செய்ததாக நீதிமன்றம் கண்டறிந்தது” என்று அஸ்மான் கூறினார்.
சம்பவம் நடந்தபோது அந்த இளைஞன் இன்னும் வயது குறைந்தவராக இருந்ததால், சிறுவர் சட்டம் 2001 இன் பிரிவு 97 (1)ஐ தண்டனைக்கு உட்படுத்தியதாக நீதிபதி கூறினார்.
சம்பந்தப்பட்ட அனைவரிடமும் அவர் மன்னிப்பு கோரியதாகவும், தண்டனைக்கு எதிராக இன்று மேல்முறையீடு செய்வதாகவும் அவரது வழக்கறிஞர் ஹைஜன் ஒமர் கூறினார்.
28 ஜனவரி அன்று, அந்த கொலை குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளுமாறு அஸ்மான், அந்த இளைஞனுக்கு உத்தரவிட்டார்.
திருத்தப்பட்ட குற்றச்சாட்டின் படி, அந்த இளைஞன் அடையாளம் தெரியாத நபருடன், செப்டம்பர் 14 ஆம் தேதி அதிகாலை 4.15 மணி முதல் காலை 6.45 மணி வரை, ஜாலான் கெராமாட் ஹுஜோங், கம்போங் டத்தோ கெராமாட், வங்சா மஜூ எனும் இடத்தில் அமைந்துள்ள தாஹ்பிஸ் மையத்தில் 23 மாணவர்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் மீது 23 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஒவ்வொன்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனையை வழங்கும் அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் இணைந்து வாசிக்கப்பட்டன.
எவ்வாறாயினும், குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 97 (1), 18 வயதிற்கு உட்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என்றும், அதேச் சட்டத்தின் பிரிவு 97 (2) இல் வழங்கப்பட்டுள்ளபடி மாமன்னர் அனுமதித்தவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறுகிறது.
அதே சட்டத்தின் பிரிவு 94, பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அபராதம் அல்லது இழப்பீடு வழங்க உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் ஜூலியா இப்ராஹிம் நடத்தினார்.