200 கிளந்தான் பெர்சத்து உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்

கோத்தா பாருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 200 பெர்சத்து மாநில உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாக முன்னாள் கிளந்தான் பெர்சத்து துணைத் தலைவர் சஸ்மி மியா அறிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சஸ்மி, கட்சி, தனிப்பட்ட லாபத்தை நாடும் அரசாங்கத்தை (கிளெப்டோக்ராசி) எதிர்த்துப் போராடுவதற்கான அதன் அசல் நோக்கத்திலிருந்து விலகிவிட்டதாக அவர்கள் உணர்ந்ததால் அந்தக் குழு இந்த முடிவை எடுத்தது என்றார்.

“14வது பொதுத் தேர்தலில் நாங்கள் எதிர்த்துப் போராடிய கட்சியுடன் ஒரு புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில், பெர்சத்துவை பாக்காத்தான் ஹராப்பனில் இருந்து வெளியேற்றுவதற்கான முடிவை எங்களால் ஏற்க முடியாது” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இன்று கட்சியை விட்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டவர்களில் கிளந்தான் பெர்சத்து செயலாளர் அனுவார் ஹம்சா மற்றும் கெத்தேரே பிரிவு பெர்சத்து துணைத் தலைவர் டாக்டர் ஹனாபி இஸ்மாயில் ஆகியோர் அடங்குவர்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய கட்சியான பெஜுவாங் தானா ஆயேர் (பெஜுவாங்) கட்சியில் இணைய பெர்சத்து கிளந்தானின் 42,000 உறுப்பினர்களில் 24,000 பேர் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்றும் அவர் கூறினார்.