இன்று, தைப்பிங், விண்ட்சர் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட உரிமையாளரான மலாக்காஃப் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டிடம், தங்களின் கோரிக்கை மனுவை ஒப்படைக்க வேண்டுமென்ற விருப்பம், போலிஸ் குழு ஒன்று தடுத்து நிறுத்தியதால் நிறைவேறாமல் போனது.
மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) தலைமையில், 25 தொழிலாளர்கள் ஒன்றுகூடி, இன்று காலை 11 மணியளவில், கோலாலம்பூரின் பிளாசா சென்ட்ரலில் உள்ள அந்நிறுவனத்திடம் மனுவைக் கையளிக்க முயன்றனர்.
தோட்டத்தில் வாழும் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து, அவர்கள் இம்மனுவை ஒப்படைக்க விரும்பினர்.
இருப்பினும், நிறுவனம் மனுவைப் பெறத் தயாராக இல்லை என்று காவல்துறையினர் கூறியதால் நிலைமை கலவரமாக மாறியது. சுமார் 50 காவல்துறையினர் சீருடையிலும் சாதாரண உடையிலும் அந்த இடத்தில் காணப்பட்டனர்.
முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார், மனுவைச் சமர்ப்பிக்க தங்கள் தரப்பில் இருவரையாவது அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், பி.எஸ்.எம். தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன், மின்தூக்கியை நோக்கி விரைந்து செல்ல முயன்றபோது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தியதால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.
பி.எஸ்.எம். துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், மனுவைச் சமர்ப்பிக்காமல் கலைந்து செல்ல ஒப்புக்கொண்டபோது நிலைமை அமைதியடைந்தது.
“தங்கள் கோரிக்கைகளை தோட்ட உரிமையாளரிடம் தெரிவிக்க முயன்ற மக்களைப் போலிஸ் தடுத்து நிறுத்திவிட்டது.
“அவை (தனியார் நிறுவனங்கள்) மிகவும் சக்திவாய்ந்தவை, அவர்கள் மிகவும் பணக்காரர்கள். ஆனால், அவர்களால் மூன்று வீடுகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் வழங்க முடியவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
அருட்செல்வன் கூறுகையில், இந்தப் பிரச்சினை மனிதவள அமைச்சுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மூன்று வீடுகளுக்கும் நீர் மற்றும் மின்சாரத்தை மீண்டும் வழங்க, தோட்ட நிர்வாகத்திற்கு கட்டளையிடும் அதிகாரம் அமைச்சருக்கு உள்ளது.
“அது தனியார் நிலம் என்று கூறி, அரசாங்கத்தால் கைக்கழுவ முடியாது. மக்களின் நலன்களை அரசாங்கம் கவனித்துகொள்ள வேண்டும். நிறுவனங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், அரசாங்கம் அவர்களை எச்சரிக்க வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
வின்ட்சர் தோட்டப் பிரச்சினை, 2018-ம் ஆண்டு தொடங்கியது. 25 தொழிலாளர்கள் தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும், 2019 இறுதிக்குள் தங்கள் வீடுகளைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டதாகவும் கூறி தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
மற்றத் தோட்டங்களைப் போல, தோட்டச் சமூக வீட்டுவசதி திட்டத்தை அவர்கள் கோருகிறார்கள்.
கடந்த 31 டிசம்பர் 2019 அன்று, விண்ட்சர் தோட்டத் தொழிலாளர் குழுவினர், மலாக்காஃப் கார்ப்பரேஷன் பெர்ஹாட் சார்பில், வின்ட்சர் தோட்டத்தை நிர்வகிக்கும் டிரேட்விண்ட்ஸ் பிளான்டெக் சென்.பெர். (Tradewinds Plantech Sdn Bhd) நிறுவனத்திடம், வீட்டுத் திட்ட விண்ணப்பக் கடிதத்தை வழங்கியுள்ளனர்.
அக்கடிதத்தில், ஊழியர்கள் தங்கள் உரிமைகோரல்கள் குறித்து நிறுவனத்துடன் விவாதிக்க தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். மேலும், வீட்டுத் திட்ட உரிமைகோரல்களுக்குத் தீர்வு கிடைக்கும் வரை கட்டாயமாக வெளியேற்றப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், ஆகஸ்ட் 19-ம் தேதி, வெளியேற மறுத்த மூன்று வீடுகளின் நீர் மற்றும் மின்சாரத்தை நிர்வாகம் துண்டித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஊழியர்கள் இன்று இந்த மனுவை ஒப்படைக்க கோலாலம்பூருக்கு வந்திருந்தனர்.