‘நாட்டை காப்பாற்றுகிறது தேசிய கூட்டணி’ – பாரிசான் செயலாளர்

ஸ்லிம் இடைத்தேர்தல் | ஸ்லிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய தேசிய கூட்டணி (பி.என்) அரசாங்கத்தை ஆதரிக்கும் ஐந்து கட்சியின் செயலாளர்கள் முதன்முறையாக மேடை ஏறினர்.

அவர்கள், பாரிசன் நேஷனல் (பிஎன்) பொதுச்செயலாளர் டான் ஸ்ரீ அன்னுவார் மூசா, டத்தோ செரி ஹம்சா ஜைனுதீன் (பெர்சத்து), டத்தோ தக்கியுதீன் ஹசான் (பாஸ்), டத்தோ சோங் சின் வூன் (எம்சிஏ) மற்றும் டத்தோ எம் அசோஜன் (எம்ஐசி) ஆவர்.

ஃபெல்டா ட்ரோலாக் உத்தாரா (Felda Trolak Utara) பல்நோக்கு பொது மண்டபத்தில் நடந்த பேச்சு, மக்களின் வெறுப்பை பெற தொடங்கிய பாக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசு நிர்வாகத்திடமிருந்து நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்காக ஏற்பட்ட தேசிய கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பைச் சுற்றியே இருந்தது.

பாக்காத்தான் அரசாங்கம் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டதாக அன்னுவார் கூறினார். ஆனால் இப்போது தேசிய கூட்டணி அரசாங்கத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து நாட்டை வழிநடத்த பிரதமர் முகிதீன் யாசினுக்கு உதவுவதில் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றார்.

“நாடு காப்பாற்றப்பட வேண்டும்; நாட்டில் ஒரு தலைவர் இருக்க வேண்டும்; பாக்காத்தான் அரசாங்கம் செய்த சேதத்தை, தவறுகளை சரிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 22 மாதங்களுக்குப் பிறகு பாக்காத்தான் நிர்வாகத்தின் கீழ் இருந்த நாட்டைக் காப்பாற்ற பெர்சத்து பாக்காத்தானை விட்டு வெளியேறியதற்காக ‘துரோகி’ என்று அழைக்கப்படும் வரையில் தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்று ஹம்சா விளக்கினார்.

“நாங்கள் நாட்டை காப்பாற்றவும் மக்களைப் பாதுகாக்கவும் தியாகம் செய்கிறோம், நாங்கள் துரோகிகள் அல்ல,” என்று அவர் கூறினார்.

மறுபுறம், கோவிட்-19 பாதிப்பினால் சோதிக்கப்பட்ட போதிலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி) செயல்படுத்துவது உட்பட பல தைரியமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தேசிய கூட்டணி நிர்வாகம் மலேசியாவை ஒரு சிறந்த திசையில் வழிநடத்துவதை நிரூபித்திருப்பதாக சோங் மற்றும் அசோஜன் விவரித்தனர்.

ஆகவே, மக்களை ஆதரிக்கும் தேசிய கூட்டணி திட்டங்களைத் தொடர, வரும் ஸ்லிம் இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு ஸ்லிம் சட்டமன்ற மக்கள், குறிப்பாக பாஸ் ஆதரவாளர்களிடம் தக்கியுதீன் கேட்டுக்கொண்டார்.