கைருதீன் அமான் ரசாலி மீது RM1,000 அபராதம் மட்டும் விதிக்கப்படக்கூடாது, மாறாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட வேண்டும், என்று அம்னோ மூத்த தலைவர் டாக்டர் புவாட் சர்காஷி தெரிவித்தார்.
அண்மையில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய கைருதீன் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவுக்கு இணங்க தவறியதைச் சுற்றி இரண்டு முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டாக்டர் புவாட் சர்காஷி தெரிவித்தார்.
முதலாவது 14 நாள் தனிமைப்படும் விதியை மீறிய குற்றச்சாட்டு. இரண்டாவது “தனக்கு பிடித்தவாறு” மலேசிய சுகாதார அமைச்சு அபராதத்தை விதிக்கும் முறை என்று புவாட் கூறினார்.
இருப்பினும், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1998 (சட்டம் 342) இன் படி சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகை RM1,000 என்று மேற்கோள் காட்டப்பட்டது.
கைருதீனின் இப்பிரச்சினையில் தேசிய கூட்டணி அரசாங்கமும் (பி.என்) அரசியல் தலையீட்டில் ஈடுபடுவதாக கருதப்படும் என்றும், அதை நம்ப முடியாது என்ற ஒரு சூழ்நிலையில் சிக்கிவிடும் என்றும் புவாட் கூறினார்.
“அதனால்தான் உங்களை காப்பாற்றிக்கொள்ள சுகாதார அமைச்சை (MOH) பயன்படுத்த வேண்டாம். கைருதீன் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும்” என்று அவர் நேற்று இரவு சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
மார்ச் மாதம் முகிதீன் யாசின் அமைச்சரவையில் சேர நியமிக்கப்பட்ட மூத்த பாஸ் சமய அறிஞர்களில் கைருதீனும் ஒருவர்.
ஜூலை 7 ஆம் தேதி துருக்கியில் இருந்து நாட்டிற்கு திரும்பி வந்தபின் சுய தனிமைப்படுத்தலைச் செய்ய வேண்டியிருந்தாலும், ஜூலை 13 ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கைருதீன் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் இந்த விசயத்தை வெளிப்படுத்தும் வரை இது குறித்து பலருக்கும் தெரியாது. இந்த காலகட்டத்தில், கோலா நெரஸ் எம்.பி. வழக்கம் போல் கடமையில் இருந்து, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
மறுபுறம், பிஎன் அரசாங்கத்தில் அமைச்சராக கைருதீன் சிறந்த செயல்திறனைக் காட்டி வருவதால் டிஏபியின் இந்த வெளிப்பாடு பொறாமையினால் ஏற்பட்ட தாக்குதல் என்று பாஸ் ஆதரவாளர்கள் கூறினர்.
இந்த குற்றத்தின் பொறுப்புக்கான அடையாளமாக கைருதீனை பதவி விலகுமாறு சில தரப்பினர் ஆன்லைனில் மனு அளித்ததையும் காண முடிந்தது.
முதலில் கைருதீன் அரண்மனையின் பெயரை மேற்கோள் காட்டுவது உட்பட தனிமைப்படுத்தல் செய்யாத தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த பல்வேறு வாதங்களை வழங்கினார்.
எவ்வாறாயினும், கைருதீன் மீது நேற்று RM1,000 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்திய பின்னர், அவர் மன்னிப்பு கேட்டு, அமைச்சராக தனது நான்கு மாத சம்பளத்தையும் திருப்பித் தர முன்வந்தார்.
இந்த வழக்கை காவல்துறையினர் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.
கைருதீன் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஆனால் உயர் கல்வி பெற்றவர், கட்சியில் ஒரு உயர் பதவியில் உள்ளார் என்று புவாட் கூறினார்.
“கைருதீன் தனது நான்கு மாத சம்பளத்தை திருப்பித் தரும் நடவடிக்கை, அவர் தனது தவறு மிகவும் தீவிரமானது மற்றும் தர்மசங்கடமானது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை காட்டுகிறது.”
“எனது விமர்சனத்தின் காரணமாக நான் முவாபாக்கட் நேஷனல் எதிராளி என்று அர்த்தம் அல்ல. நான் நிச்சயமாக விமர்சிக்கப்படுவேன். எல்லா கட்சியும் ஒன்றுதான். ஆனால் மக்களின் நம்பிக்கை துண்டிக்கப்பட்டுவிடக் கூடாது,” என்றார்.