தனிமைப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் கைருதீன் அமான் ரசாலி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடமே ஒப்படைத்துள்ளதாக பிரதமர் முகிதீன் கூறியுள்ளார்.
ஜூலை 7 ஆம் தேதி துருக்கியில் இருந்து திரும்பிய பின்னர் கைருதீன் தனிமைப்படும் உத்தரவை மீறியதாகக் கூறப்படும் வழக்கை அரசாங்கம் கவனத்தில் கொண்டு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்று முகிதீன் யாசின் கூறினார்.
“ஒவ்வொரு மலேசியரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்றும், யாரும் விதிவிலக்கில்லை என்றும் தேசிய கூட்டணி அரசு (பிஎன்) கருதுகிறது.”
“இது தொடர்பாக, ஒரு முழுமையான விசாரணையை நடத்துவதற்கும், சட்ட நடைமுறைக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விட்டு விடுகிறேன்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைருதீன் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தபின் சுய தனிமைப்படுத்தலை செய்யாததால் அதிகபட்சமாக RM1,000 அபராதம் விதிக்கப்பட்டதை நேற்று மலேசிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
எவ்வாறாயினும், இந்த அறிக்கை பொதுமக்களின் கோபத்தைத் தணிக்கவில்லை.
கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான நிலையான இயக்க நடைமுறையின் (எஸ்ஓபி) ஒரு பகுதியாக, வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து நபர்களை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் முன்பு கட்டாயமாக்கியது.
ஜூலை 7 ஆம் தேதி துருக்கியில் இருந்து திரும்பிய கைருதீன் ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 13 அன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
இந்த பயணம் அதிகாரப்பூர்வமானதா அல்லது தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து இதுவரை தெளிவான அறிக்கை எதுவும் இல்லை.
முன்னதாக இன்று நாடாளுமன்றத்தில், துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி, மனித உயிர் சம்பந்தப்பட்டிருப்பதால், கோவிட்-19 எஸ்ஓபி-யுடன் இணங்காமல் சட்டத்தை யாரும் மீற முடியாது என்று தெரிவித்தார்.
மாமன்னரும் அவரது துணைவியார் ஆகியோரும் கூட 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டனர் என்று அவர் விளக்கினார்.
“இதேபோல், பிரதமர் முகிதீன் யாசினும் முன்பு வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், முகிதீன் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட போதிலும் இன்னும் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன என்றுள்ளார் வழக்கறிஞர் சியாஹ்ரெட்சான் ஜோஹன்.
சியாஹ்ரெட்சான் எழுப்பிய கேள்விகளில், கைருதீன் வெளிநாட்டை விட்டு வெளியேறியதும், அது எந்த நோக்கத்திற்காக என்பதும் முகிதீனுக்குத் தெரியுமா என்று கேட்டுள்ளார்.
“சம்பந்தப்பட்ட அமைச்சர் தனிமைப்படுத்தப்படவில்லை என்பது பிரதமருக்குத் தெரியுமா?
ஆகஸ்ட் 7 ஆம் தேதி அபராதம் விதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறுகிறது. அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது பிரதமருக்கு தெரியுமா?
“மூன்று பத்தி அறிக்கையில் (முகிதீன்) பதிலளிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.