2020 மகளிர் சமத்துவ தினம் (Women’s Equality Day): அரசாங்கம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்- மகளிர் உதவி அமைப்பு
2020 மகளிர் சமத்துவ தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் நம் நாடு இப்போது ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கோவிட்-19 தொற்றுநோய், தற்போதுள்ள பாலின ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தியுள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாகுபாட்டை ஒழிப்பதில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அச்சுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தொற்றுநோய் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவை நாம் மீண்டு வருவது மட்டுமல்லாமல், விரைவான, தீர்க்கமான நடவடிக்கைகளின் மூலம் இந்த நெருக்கடியை சமாளிப்பதில் வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கையையும் அளித்துள்ளன. மேலும், பொருளாதார ரீதியாக, சமமாகவும் வலுவாகவும் மாறுவோம் என்பதற்கான அறிகுறிகளையும் கொடுத்துள்ளன.
கீழ்கண்ட நான்கு விஷயங்களைச் செய்யுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்:
1. பாலியல் வன்முறை/பாலியல் துன்புறுத்தல் மசோதாவை நிறைவேற்றவும்
பாலியல் வன்முறை/பாலியல் துன்புறுத்தல் பல்வேறு வழிகளில் பெண்களின் பொருளாதார வலுவூட்டலை பாதிக்கிறது.
பெண்களின் வேலைவாய்ப்பு, வேலை நியமிப்பு, அல்லது பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதிப்பது, பல்கலைக்கழக சூழலில் கல்வியை பாதிப்பது, மற்றும் சைபர் வன்முறையின் விளைவாக ஆன்லைனில் வருமானம் ஈட்டக்கூடிய செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்கள் விலகி இருத்தல் போன்ற பிரச்சனைகள் உள்ளன.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பாலியல் வன்முறை/பாலியல் துன்புறுத்தல் மசோதா, எல்லா சூழலிலும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கச் செய்வதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதை உறுதிசெய்கிறது; துன்புறுத்தலைத் தடுப்பதில் ஒரு முன்னெச்சரிக்கை நிலைப்பாட்டை எடுக்க முதலாளிகளை ஊக்குவிக்கிறது.
2. ‘பின்தொடர்வதை’ தண்டனைச் சட்டத்தில் ஒரு குற்றமாக பட்டியலிட வேண்டும்
மலேசியாவில் ‘பின்தொடர்வது’ என்பது ஒரு குற்றம் அல்ல. அதாவது, யாராவது ஒருவர் உங்கள் பணியிடத்தில் இருந்து மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டால், அல்லது உங்களை பின்தொடர்ந்தால் அல்லது திடீரென உங்கள் முன் வந்து தோன்றினால், (‘பின்தொடர்வதன்’ பொதுவான செயல்கள்) இது குறித்து அதிகாரிகள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் அதிக அளவுக்கு ஏதும் இல்லாமலேயே உள்ளது.
டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘பின்தொடர்வதால்’ பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறிந்துள்ளனர், இதில் கவலை, மன அழுத்தம் மற்றும் மனஉளைச்சல் அறிகுறிகள் தென்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
‘பின்தொடர்வது’ மேலும் கடுமையான வன்முறைக்கு வழிவகுக்கும். கனடாவிலும் அமெரிக்காவிலும், 90 சதவிகித பெண்கள் தங்களைத் பின்தொடர்ந்த வாழ்க்கைத் துணைகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
‘பின்தொடர்வது’ குறித்த எதிர்ப்பு சட்டங்கள், பெண்களை துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவுகளை பிறப்பிக்க அனுமதிக்கும்.
3. பணிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பணிச் சட்டத்தில் திருத்தங்கள், தந்தைமார்களுக்கு மூன்று நாட்கள் குழந்தை பிறப்பு விடுப்பை அறிமுகப்படுத்துதல், ஊதியம் பெற்ற மகப்பேறு விடுப்பை 90 நாட்களுக்கு நீட்டித்தல், நெகிழ்வான வேலை நேரங்களை செயல்படுத்துதல், மற்றும் தொழிலாளர்கள் மீதான பாலின, இனம் மற்றும் மதக் கொள்கை அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
தந்தைமார்களுக்கு மூன்று நாட்கள் மகப்பேறு விடுப்பு போதாது என்பதால் தனியார் துறையில் பணிபுரியும் தந்தைமார்களுக்கு குறைந்தது ஏழு நாட்கள் ஊதியம் பெற்ற விடுப்பை அறிமுகப்படுத்துமாறு WAO அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தந்தைமார்களுக்கு ஏழு நாள் ஊதியம் பெற்ற விடுப்பு, குழந்தை பராமரிப்பு என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்ற செய்தியை வழங்கும். இதனால் குழந்தை பிறக்கும் போது தந்தையும் பொறுப்பில் பங்கு வகிக்க முடியும். இது ஒரு வீட்டில் பாலினங்களுக்கிடையிலான சம்பள இடைவெளியைக் குறைக்கும் எனவும் காணப்படுகிறது.
கூடுதலாக, வேலை தேடுபவர்களுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
பாலின அடிப்படையிலான மற்றும் கர்ப்பத்திற்கு எதிராக பாகுபாடுகள், வேலை தேடுபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமலும் வேலை தேடும் பல பெண்கள் வேலை சந்தையில் இருந்து விலக்கப்படுவார்களாகவும் ஆகின்றனர்.
4. அனைவரையும் உள்ளடக்கிய 2021 வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கவும்
பெண்களுக்கு போதுமான வள ஒதுக்கீட்டை உள்ளடக்கிய 2021 வரவுசெலவுத் திட்டம் பெண்களின் பொருளாதார பங்களிப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் கட்டமைப்பதில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய 2021 வரவுசெலவுத் திட்டம் மலேசியாவில் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பாலின சமத்துவத்தின் வீழ்ச்சியை மேம்படுத்த உதவும். இது முக்கியமாக மூன்று முக்கிய துறைகளில் பெண்களின் வீழ்ச்சியை நிவர்த்தி செய்து மேம்படுத்த உதவும்: பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த கருத்தளிப்பு, பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பெண்களின் ஆரோக்கியம்.
2021 வரவுசெலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய மூன்று அம்சங்களில், குறிப்பாக பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இல்லம் அல்லது முகாம்களுக்கு பெரிய தொகையிலான ஒதுக்கீடுகள், பராமரிப்புத் துறையில் பொது முதலீட்டை அதிகரித்தல் – எ.கா. குழந்தை பராமரிப்பு வழங்குநர்களுக்கு மானியங்கள் வழங்குதல், மற்றும் நாட்டில் முழுமையாக செயல்படும் சிறப்பு பயிற்சி மற்றும் மையங்களுக்கு போதுமான ஒதுக்கீடுகளை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.
மலேசியாவை பெண்களுக்கு ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கும், மலேசியாவை அனைவருக்கும் ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கும் உறுதியான நடவடிக்கைளை எடுக்க வேண்டிய நேரம் இது.
PERTUBUHAN PERTOLONGAN WANITA (WAO) 1982 இல் நிறுவப்பட்டது. இது பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்குமிடம், ஆலோசனை மற்றும் இலவச நிவாரணத்தை வழங்குகிறது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் வீட்டு வன்முறை, கற்பழிப்பு மற்றும் கடத்தல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு தங்கள் வாழ்க்கையை மீண்டும் வடிவமைக்க உதவுகின்றது. பொதுக் கொள்கையை மேம்படுத்துவதன் மூலமும், சமூக சிந்தனையை மாற்றுவதன் மூலமும் பாதிக்கப்பட்ட இவர்களை பாதுகாக்க WAO கடமையாகக் கொண்டுள்ளது.