தேசிய கூட்டணியில் சேருவதில் இருந்து விலகியது ம.இ.கா

தேசிய கூட்டணியில் அம்னோ இணைய வேண்டாம் என்று முடிவு செய்ததை அடுத்து, ம.இ.கா கட்சியும் அதில் சேருவதில் இருந்து விலகியது.

கட்சியின் முடிவை தெரிவிக்க ம.இ.கா, மலேசிய சங்கங்கள் பதிவுத் துறைக்கு (ஆர்.ஓ.எஸ்) கடிதத்தையும் அனுப்பியுள்ளது.

“ஜூலை 15, 2020 தேதியிட்ட எங்கள் கடிதம் பற்றி குறிப்பிடுகையில், அம்னோ தேசிய கூட்டணியில் இணையும் என்ற எண்ணத்துடன் ம.இ.கா உச்ச மன்றம் தேசிய கூட்டணியில் சேர ஒருமனதாக ஒப்புக் கொண்டது.”

“ஜூலை 29, 2020 அன்று அம்னோ தேசிய கூட்டணியில் சேர விரும்பம் கொள்ளவில்லை என்பதால், உச்ச மன்றத்தின் அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, ம.இ.கா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், தேசிய கூட்டணியில் சேருவதற்கான கட்சியின் நடவடிக்கை, பாரிசான் நேசனல் கட்சி, குறிப்பாக அம்னோ கட்சி கூட்டாளர்களுக்கு துரோகம் செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

பெர்சத்து, பாஸ் மற்றும் பார்ட்டி சோலிடரிட்டி தானா ஆயேர்கு (ஸ்டார்) ஆகிய கட்சிகளுடன் இணைந்து, ம.இ.கா.-வும் தேசிய கூட்டணியில் சேர பதிவு செய்திருப்பதை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹித் ஹமிடி கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, அஹ்மட் ஜாஹிட், அம்னோ தேசிய கூட்டணியில் இணையாது என்றும், அதற்கு பதிலாக அது பாஸ் கட்சியுடன் முவாபாகாட் நேஷனலை பலப்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.