நேற்று, சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சுஹாகாம் மனித உரிமை ஆணையத்திடம் மனு ஒன்றினைக் கையளித்தது.
தற்போது, கோவிட் பெருந்தொற்றின் காரணமாக, மக்கள், குறிப்பாக பி40 குழுவினர் பொருளாதார நிலையில் மிகவும் பாதிகப்பட்டு, மன அழுத்தத்தில் இருக்கின்றனர்.
வேலை இழந்த அவர்களில் பலர், வேலை தேடிகொண்டும், கடன் தொல்லையில் சிக்கிக்கொண்டும் அல்லல்படுகின்றனர். இந்நேரத்தில், புலனம் மற்றும் முகநூலில் வெளிவரும் பல்வேறு கடன் விளம்பரங்களைப் பார்த்து, அதன்பால் ஈர்க்கப்பட்டு, எளிதில் மாட்டிக்கொள்கிறார்கள். இன்று சைபர் மோசடிக் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு அதுவே முக்கியக் காரணமாக உள்ளது.
இதுதொடர்பாக, காவல்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்தால், காவல்துறை சம்பந்தப்பட்டவர்களை விட்டுவிட்டு புகாரளித்தவர்களுக்கே அதிக அழுத்தம் கொடுப்பதாக பி.எஸ்.எம். குற்றஞ்சாட்டியுள்ளது.
“இதனால், மோசடியில் பாதிகப்பட்டவர்களே அதிகம் தண்டிக்கப்படுகின்றனர்; திட்டம் போட்டு ஏமாற்றியவர்கள் தப்பிவிடுகின்றனர்,” என்று பி.எஸ்.எம். கூறியுள்ளது.
எனவே, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறை முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று, இணைய மோசடியில், அண்மையில் பாதிக்கப்பட்ட ஆறுமுகம், வள்ளி , கோகிலா மற்றும் பிரேம் குமார் ஆகியோரும் சுஹாகாம் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
“தொடர்ந்து இணைய மோசடியில் மக்கள் நாளுக்கு நாள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அது தொடர்பாக, அண்மையில் பி.எஸ்.எம். ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தினையும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, சுஹாகாம் அலுவலகத்தில் மனு சமர்ப்பிக்க நாங்கள் முடிவெடுத்தோம்,” என்று பி.எஸ்.எம். தேசியத் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார்.
“இணைய மோசடியில் ஏதும் அறியாத மக்கள் பாதிக்கப்படுவதும், இந்த நாசவேலையை வடிவமைக்கும் உண்மையான நபர்கள் தப்பித்துக்கொள்வதும் நியாயமானது அல்ல. சிசிடிவி ஆதாரங்கள், ஏடிஎம் பட்டுவாடா இயந்திரத்தின் பதிவுகள் எனக் குற்றவாளிகள் விட்டுச் செல்லும் சில ஆதாரங்களைக் காவல்துறை துரிதப்படுத்தி விசாரித்தால் நிஜக்குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிறு துருப்பு சீட்டு கிடைத்த மாதிரி இருக்கும்.
“மேலும், பாதிக்கப்பட்டு, பயத்திலிருப்பவருக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதும், அவர்களைக் குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திப்பதும் வாடிக்கையாகி வருகிறது.
“குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த அபராதமும், இல்லையென்றால் பெரிய தொகையில் பிணைப்பணம் செலுத்த வேண்டி வரும் என்று பி40 பிரிவினரை அச்சுறுத்தினால், அது அவர்களை எந்த நிலையில் நிற்கவைக்கும் என்பதை அரசு தரப்பு அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்,” என்றும் அருட்செல்வன் வலியுறுத்தினார்.
கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட சுஹாகாம் மனித உரிமை அமைப்பின் அதிகாரி, ஜேரல் ஜோசப், இது தொடர்பாக தாம் மேலவையில் பேசுவதாக உறுதியளித்தார்.
“பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை நான் நன்கு உணர்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் பொதுமக்களை, சில தரப்பினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது தெரிகிறது, இது கண்டிக்கத்தக்கது,” என்றும் அவர் தெரிவித்தார்.