வின்சர் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் வீடு தொடர்பான போராட்டத்தில் வெற்றி அடைவது கடினம் என ஜசெக-வைச் சார்ந்த, சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அதன் தொடர்பில், பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினரும், தோட்ட மக்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான கார்த்திகேஸ் இராஜமாணிக்கம் வெளியிட்ட பதில் அறிக்கை பின்வருமாறு :-
பத்திரிகை செய்தியில் சிவனேசன் பேசியிருப்பது வேடிக்கையாக இருப்பது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது. தொழிலாளர்கள் உரிமைக்காகக் குரல் கொடுப்பதை, <em>அவர்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்</em>
என்று சிவநேசன் இட்டுக்கட்டி பேசுவதை நிறுத்திகொள்ள வேண்டும் என்று கார்த்திகேஸ் கேட்டுகொண்டுள்ளார்.
“கடந்த ஆண்டு, நாடாளுமன்றத்தின் முன் நடந்த அமைதி பேரணியில், முன்னாள் மனிதவள அமைச்சர் குலசேகரனிடன் மனு ஒன்றைச் சமர்ப்பித்தோம். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட அவர், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால், அதேக் கட்சியைச் சேர்ந்த சிவநேசன் முதலாளியின் கைக்கூலி போல், இப்போது பேசுவது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டையேக் காட்டுகிறது.”
சிவநேசன் அளித்த பத்திரிகை செய்தியிலிருந்து நாங்கள் எழுப்பும் கேள்விகள் :
1. தோட்டத் தொழிலாளர்களைக் கட்டாயமாக வீட்டைவிட்டு வெளியேற்றுவது எந்தச் சட்டத்தில் இருக்கிறது?
2. தொழிலாளர்களுக்கான வீட்டுரிமை திட்டத்தை நிறைவேற்றாமல், அவர்களைத் தோட்டத்திலிருந்து துரத்தலாமா?
3. நீர், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளைத் துண்டிக்கலாம் என, எந்தச் சட்டம் சொல்கிறது?
4. சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்காமல், ஒரு குண்டர் கும்பலைப்போல தொழிலாளர்களிடம் நடந்துகொள்ள, நிர்வாகத்திற்கு யார் அனுமதி அளித்தது?
ஒரு தொழிலாளி வேலை செய்து பணி ஓய்வு பெறும் வரையில்தான் அவருக்கு வீடு கொடுக்க முடியும் என்றால் அதன் பிறகு அந்தத் தொழிலாளி எங்குப் போக வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பதையும் சிவநேசன் கூறியிருக்க வேண்டுமென கார்த்திகேஸ் தெரிவித்துள்ளார்.
“குறைந்த பட்சம், அவருக்குத் தெரிந்த சட்டத்தில் என்ன இருக்கிறது என்றாவது சொல்லியிருக்கலாம். தற்போது மலேசியாவில் வீட்டின் விலை என்னவென்று அவர் அறிந்து வைத்திருக்கிறாரா?
“ஒரு தோட்டப் பாட்டாளி 60 வயதிற்கு மேல் வீடு வாங்க முடியுமா? பல ஆண்டுகள் தோட்டத்திற்காக உழைத்த அவர்களுக்கு மலிவு விலை வீடுகளைக் கட்டிக்கொடுப்பதில் பெருநிறுவனங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது? தொழிலாளர்கள் இலவசமாக எதையும் கேட்கவில்லை. பணம் கட்டுவதாகதானே சொல்கிறார்கள். அவர்கள் வேலையில் இருக்கும்போதே அதை செய்துக்கொடுக்கலாமே? அதைச் செய்யாமல், அவர்களின் சேவை காலம் முடிந்தப் பிறகு, அவர்களை வீட்டை விட்டு துரத்துவது சரியா?” என்று கார்த்திகேஸ் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
“அது சரி என்று சொல்லும் சிவநேசன் எப்படி மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார் என்று புரியவில்லை. உண்மையில் பிரச்னையை திசை திருப்புவது நாங்களோ தோட்ட மக்களோ இல்லை. சிவநேசன் மாதிரியான, பொறுப்பில்லாத ஆட்கள்தான். பாட்டாளி மக்களுக்காகக் குரல் கொடுக்க முடியாத அவர்கள், பாட்டாளிகளின் பிரச்னையைப் புரிந்துக்கொள்ள முடியாத அவர்கள், குறைந்த பட்சம் சுய விளம்பரம் தேடிக்கொள்ளாமல் இருக்கலாம்,” என்றும் கார்த்திகேஸ் தனது பத்திரிக்கை அறிக்கையில் சிவநேசனை சாடியுள்ளார்.